தேர்தல் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கூட்டணிதான். எந்தக் கட்சி ஆட்சியில் அமர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் `நாம் யாருடன் கூட்டணி வைக்கிறோம்’ என்பதுதான் முக்கியப் பங்கு வகிக்கிறது எனலாம். இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க தீவிரமாகச் செயல்படுகிறது. அதற்கு நேரெதிராக காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 அரசியல் கட்சித் தலைவர்கள் பா.ஜ.க-வை எதிர்த்துக் களமாடத் தயாராகிவிட்டனர்.

இதற்காக 26 எதிர்க்கட்சித் தலைவர்கள் முதற்கட்டமாக பாட்னாவில் கூடினர். அதைத் தொடர்ந்து, நேற்றும் இன்றும் கர்நாடகாவின் பெங்களூரில் ஒன்றுகூடி, தங்கள் கூட்டணிக் கட்சிக்கு I.N.D.I.A எனப் பெயரிட்டிருக்கின்றனர். இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும்விதமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) கூட்டம் இன்று மாலை டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கலந்துகொள்ள 38 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட சில கட்சிகள் பங்கெடுத்திருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றிருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடு முழுவதிலுமிருந்து தலைநகர் டெல்லிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் கூட்டணி இது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “NDA என்றால் N- new india, D- Development, A-Aspiration. அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு பெரிய இலக்கை அடைய நமது நாடு பெரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. வளர்ந்த இந்தியா, தன்னிறைவு பெற்ற இந்தியாதான் நம்முடைய இலக்கு. எதிர்க்கட்சியில் இருந்தபோதும், நாங்கள் எப்போதும் நேர்மறையான அரசியலைத்தான் செய்தோம்.
எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள், அப்போதைய அரசாங்கங்களின் மோசடிகளை வெளியே கொண்டு வந்தோம். ஆனால், மக்களை அவமதிக்கவில்லை. ஆளும் அரசாங்கங்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் அந்நிய சக்திகளின் உதவியைப் பெற்றதில்லை. நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்களில் நாங்கள் ஒருபோதும் தடைகளை உருவாக்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, தேசம், அதன் பாதுகாப்பு, முன்னேற்றம், மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதே முதன்மையான நோக்கம். எங்களுடைய ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில், ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்டிருக்கும் பணிகளை ஆய்வுசெய்ய வேண்டும். இது நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கடந்த 9 ஆண்டுகளில், ஊழலின் அனைத்து வழிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம்30 லட்சம் கோடி ரூபாயை செலுத்தியிருக்கிறோம். ஊழலில் சிக்கிய சுமார் 3 லட்சம் கோடி ரூபாயைச் சேமித்திருக்கிறோம். அரசியலில் போட்டி இருக்க வேண்டும். ஆனால், தலைவர்கள் எதிரிகள்போல் நடந்து கொள்ளக் கூடாது.

எங்கள் கூட்டணியில் எந்தக் கட்சியும் சிறியதோ, பெரியதோ இல்லை. நாம் அனைவரும் ஒன்றாக ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். வரும் மக்களவைத் தேர்தலில் நமது கூட்டணியில் வாக்கு சதவிகிதம் ஐம்பதைத் தாண்டும். கடந்த 9 ஆண்டுக்கால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வலுவான அடித்தளம் போடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த அடித்தளத்தில் புதிய, வலிமையான மற்றும் ஆத்மநிர்பர் பாரதத்தை உருவாக்கியிருக்கிறோம். 2014-ல் இந்தியப் பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்தது, தற்போது 5-வது இடத்தில் நாம் இருக்கிறோம்.