அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்து ஸ்டாலினை சந்தித்த பொன்முடி… நடந்தது என்ன?

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள அவரது வீடு, அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள அவரது வீடு, அவரது மகன்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 7 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை விசாரணையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடியை அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வந்தனர்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூர்த்தி, ரகுபதி, சி.வி.கணேசன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை சந்தித்து பேசினர். அப்போது அமலாக்கத்துறை விசாரணை குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று காலையிலேயே அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த சட்ட ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்தாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் பெங்களூரூ சென்றிருந்தார். பெங்களூரில் இருந்தப்படியே நேற்று அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு பேசினார். இந்நிலையில் நேற்று இரவு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினை இன்று காலை அமைச்சர் பொன்முடி நேரில் சநந்தித்து பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.