அல்லு கிளப்பிய கிம் ஜாங் உன்.. பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி! விழி பிதுங்கிய ஜப்பான், தென்கொரியா

பியாங்யோங்: அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வடகொரியா தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. இது அமெரிக்காவின் கூட்டாளியான தென்கொரியா மற்றும் ஜப்பான் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் ஓரணியில் கைகோர்த்திருக்கும் நிலையில் இதற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் நேட்டோ படையினர் விரட்டப்பட வேண்டும் என்பதில் வடகொரியா தீவிரமாக இருக்கிறது. ஆனால் இதற்கு அமெரிக்காவும், அதன் கூட்டாளியுமான தென் கொரியாவும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இரு நாடுகளுக்கிடையேயும் பதற்றம் நீடித்த வருகிறது.

இந்நிலையில் தென்கொரியாவுடன் அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ பயிற்சியை தொடங்கி இருக்கிறது. இது கடந்த 5 ஆண்டுகளில் நடைபெறும் மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சியாகும். அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே கடந்த 2018ம் ஆண்டு ‘சுதந்திரக் கேடயம்’ எனும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 10 நாட்கள் வரை இரு நாடுகளும் போர் பயிற்சியை மேற்கொள்ளும். இந்த பயிற்சியில் இரு நாடுகளும் பின்பற்றி வரும் போர் தந்திரங்களை பகிர்ந்து கொள்ளும்.

இதேபோல ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தென்கொரியாவுடன் அமெரிக்க ராணுவம் ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ஒரு முறை விமான பயிற்சி என்றால் மறுபுறம் கடற்படை பயிற்சி. இப்படி சமீபத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருவது பக்கத்திலேயே இருக்கும் வடகொரியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே வடகொரியா வழக்கம்போல தன்னுடைய ஏவுகணை பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது.

இது மட்டுமல்லாது நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணைகளை ஏவுவதையும் வடகொரியா முயற்சித்து பார்த்து வெற்றிக்கண்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இதுபோன்ற ஏவுகணைகளை வடகொரியா ஏவி வருகிறது. இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையை சேர்ந்ததாகும். இது கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டதாகும். தற்போது ஏவப்பட்டுள்ள ஏவுகணையானது சுமார் 1,500 கி.மீ தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். 1,500 கி.மீ எனில் அமெரிக்காவின் நேச நாடான ஜப்பான் இந்த வரம்புக்குள்தான் வருகிறது.

அதேபோல அமெரிக்காவின் மிக முக்கிய ராணுவ தங்களும் இந்த எல்லைக்குள்தான் வருகிறது. இது தவிர தென்கொரிய+அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை வடகொரியா தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஆனால் இந்த ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் நேச நாடுகளை அச்சுறுத்தும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கெனவே அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக வடகொரியா மீது புகார் இருக்கிறது. எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சில வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.