கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த ஒன்றிணைந்த இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு `I.N.D.I.A’ என ஆலோசனைக் கூட்டத்தில் பெயர் வைக்கப்பட்டது. ஏற்கெனவே பாட்னாவில் நடந்த முதல் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 18 கட்சிகள் கலந்துகொண்டிருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்துகொண்டன. இன்னொருபக்கம் பா.ஜ.க-வுடன் 38 கட்சிகள் கலந்துகொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டமும் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

ஆனால், இந்த இரு கூட்டத்திலும் மாயாவதி, ஒவைசி போன்றோர் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் தரப்பில் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தாங்கள் `அரசியல் தீண்டத்தகாதவர்’ என ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் (AIMIM) கட்சி கூறியிருக்கிறது.
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்துப் நேற்று பேசிய AIMIM-ன் தேசிய செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான், “அவர்கள் (எதிர்க்கட்சிகள் கூட்டணி) எங்களை அழைக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் `அரசியல் தீண்டத்தகாதவர்கள் (Political Untouchables) ‘. உங்களுக்கு (எதிர்க்கட்சிகள் கூட்டணி) முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் மட்டும் வேண்டும். ஆனால், அவர்களை அரசியல்ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை. பிறகு எதற்கு மதச்சார்பின்மை பற்றி பேசுகிறீர்கள். ஒரு காலத்தில் பா.ஜ.க-வுடன் இருந்த நிதிஷ் குமார், உத்தவ் தாக்கரே, மெகபூபா முஃப்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதும் இப்போது திடீரென மதச்சார்பற்றவர்களாகிவிட்டனர்.

அரசியலமைப்பும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டும், பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாங்களும்கூட அதைத்தான் விரும்புகிறோம். மோடி மீண்டும் பிரதமராக வரக் கூடாது. அதற்கான முயற்சிகளை நாங்களும் செய்துவருகிறோம். இருப்பினும், அரசியலமைப்பைக் காப்பாற்றுவதைப் பற்றி பேசுவதாலும், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நிற்பதாலும் ஒவைசியை எதிர்க்கட்சிகள் கூட்டணி புறக்கணிக்கின்றன” என்று குற்றம்சாட்டினார்.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி Vs I.N.D.I.A எனச் சூழல் உருவாகியிருக்கும் நிலையில், மூன்றாவது அணியை உருவாக்க ஒத்த எண்ணத்துடன் இருக்கும் கட்சிகளுடன் AIMIM பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.