கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல், பருத்தி, சோளம், கேழ்வரகு, நிலக்கடலை, தர்பூசணி, மஞ்சள் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நிலப் பகுதியும், மண் வளமும் மாறுபட்டு இருப்பதால் நல்ல விளைச்சல் என்பது அரிதானதே. அப்படியே விளைச்சல் கிடைத்தாலும் சந்தையில் போதுமான விலை கிடைப்பதில்லை. இதன் காரணமாக, பல ஏக்கர் நிலங்கள் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலங்களாக இருக்கின்றன. இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வளம் என்பது இரண்டு விஷயங்களையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. ஒன்று, ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள். இரண்டாவது, அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள். வீட்டுக்கு ஒருவர் நிச்சயம் துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளங்களை, வாய்ப்புகளாக மாற்றி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஜப்பானியர்களின் விருந்துகளில் பரிமாறப்படும் உணவு வகைகளில் மோச்சி (Mochi) எனும் இனிப்பு வகைக்கு முக்கிய இடமுண்டு. அந்த மோச்சி இனிப்பை அப்படியே மை மோச்சி (My Mochi) எனும் பெயரில் பிராண்டாக மாற்றி ஜப்பான், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஐஸ்கிரீமாக விற்கிறார்கள். மோச்சி என்பதை மிக எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நம்மூர் அரிசி கொழுக்கட்டைதான். அரிசி மாவும் இனிப்பும் சேர்த்து சமைக்கப்படும் முறைதான் மோச்சிக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மை மோச்சி ஐஸ்கிரீமுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மோச்சி ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவலாம்.

ஒரு மோச்சி ஐஸ்கிரீம் 100 கலோரிகளைக் கொண்டிருப்பதால், காலை சிற்றுண்டிக்கும், பயணத்தின்போது சாப்பிடுவதற்கும் ஏற்ற ஒன்றாக மோச்சி ஐஸ்கிரீமை அயல்நாட்டவர்கள் கருதுகின்றனர். ஐஸ்கிரீம் மேலே உள்ள லேயரானது அரிசிமாவிலிருந்து செய்யப்படுவதால் சுவையானதாகவும், க்ரிஸ்பியானதாகவும் (Crispy), மிருதுவாகவும், கிரீமியாகவும் (Creamy) இருப்பதால், சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினரையும் கவருகிறது. வெண்ணிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, கிரீன் டீ எனப் பல்வேறு ஃபிளேவர்களில் கிடைப்பதால் அதன் சுவையில் பெரும்பாலானோர் திளைக்கிறார்கள்.
சந்தையில் 6 துண்டுகள் கொண்ட மோச்சி ஐஸ்கிரீமை 450 ரூபாய்க்கு வைத்து விற்பனை செய்கிறார்கள் என்பதால், கள்ளக்குறிச்சியில் உற்பத்தியாகும் ஐஸ்கிரீம்களை, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யும்போது, ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம் கள்ளக்குறிச்சி. கிழக்கில் விழுப்புரம் மாவட்டத்தையும் தெற்கில் கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களையும், மேற்கே சேலம், வடக்கே திருவண்ணாமலை, தருமபுரி என நான்கு பக்கங்களிலும் இருக்கும் மாவட்டங்களுக்கு குறுகிய நேரத்தில் சென்று சேருமளவுக்கான வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. சென்னை `டு’ சேலம் செல்லும் NH-79 புறவழிச் சாலையிலிருந்து பிரிந்து, கள்ளக்குறிச்சிக்குப் பெரும்பாலான பேருந்துகள் நகரின் மையப் பகுதிக்குள் சென்று, பின்னர் புறவழிச்சாலையை சென்றடைகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இயலாமல் திணறி வருகின்றனர் அந்தப் பகுதி வணிகர்கள். இதைத் தவிர்க்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் ஒரு நவீன பேருந்து நிலையத்தை அமைக்கலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கல்வாரயன் மலை உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் வருவார்கள். அவர்களுக்குரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும்போது அது சுற்றுலாவினரை மேலும் கவரும். அந்த வகையில் சுற்றுலாப் பயணிகள் கள்ளக்குறிச்சிக்குள் நுழைந்தவுடன் அவர்கள் முதலில் கால் பதிக்கும் இடம் பேருந்து நிலையமாகத்தான் இருக்கும். அது பல்வேறு வசதிகளுடன்கூடிய நவீன பேருந்து நிலையமாக இருக்கும்பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்ச்சியும் குதூகலமும் பெறுவார்கள். அவர்களின் மகிழ்ச்சியான பயணம் பேருந்து நிலையத்திலிருந்தே தொடங்குவதால், திருப்தியான உணர்வுடன் சுற்றுலாத்தலங்களைக் கண்டுகளிப்பார்கள்.
பின்லாந்து நாட்டிலுள்ள கேம்பியில் (Kamppi) கேம்பி சென்டர் (Kamppi Center) என்ற ஒன்று உள்ளது. மிகவும் நவீனமான பேருந்து நிலையத்தைக் கொண்டிருக்கிறது. இதில், நகரம், மாநகரம், நீண்டதூரம் பயணிக்க வேண்டிய வெளியூர்கள் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு தனித்தனியே கட்டடங்களை வடிவமைத்திருக்கிறார்கள். அதோடு, பேருந்துகளில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்குத் தனியே பணிமனையும், பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த தனியே இடமும் உண்டு.
இவற்றோடு 6 அடுக்குகளைக்கொண்ட வணிக வளாகமும் இருக்கிறது. அவற்றில் சூப்பர் மார்க்கெட், உணவகங்கள், தங்கும் விடுதிகள், அத்தியாவசியப் பொருள்களின் பிராண்டுகளின் கிளைகள் போன்றவற்றை உள்ளடக்கி, சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் கட்டியிருக்கிறார்கள். இதே போன்ற வடிவமைப்பிலும் நவீன வசதிகளையும் உள்ளடக்கிய நவீன பேருந்து நிலையத்தை கள்ளக்குறிச்சியில் அமைக்கலாம். இதனால், வணிகர்களும் மக்களும் பயணிக்க வசதி ஏற்படுவதோடு, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் வழியாக, போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதோடு பொருளாதார முன்னேற்றத்தையும் அடையலாம்!
கள்ளக்குறிச்சிக்கு மிக அருகிலிருக்கும் மாவட்டம் சேலம்தான். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தங்களின் பெரும்பாலான பொருள் தேவைகளுக்கு சேலத்தைதான் நம்பியிருக்கின்றனர். உதாரணமாக, உணவு, உடை, மருத்துவம், அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கான பெரிய பிராண்டுகளைப் பெற சேலத்துக்கே செல்ல வேண்டும். இந்தத் தேவையை கருத்தில்கொண்டு, புதுச்சேரியிலுள்ள ப்ரொவிடென்ஸ் மாலினை (Providence Mall) முன் உதாரணமாகக் கொண்டு, கள்ளக்குறிச்சியில் ஷாப்பிங் மால் (Shopping Mall) ஒன்றை அமைக்கலாம்.
அந்த மாலில் விமன்ஸ் பேஷன்ஸை (Women’s Fashion) முன்னிறுத்தும் நல்லி (Nalli), கோ கலர்ஸ் (Go Colors), ட்வின் பேர்ட்ஸ் (Twin birds), நாயுடு ஹால் (Naidu Hall) போன்றவற்றையும், மென்ஸ் பேஷன்ஸில் (Men’s Fashion) முன்னிலை வகிக்கும் இந்தியன் டெரயின் (Indian Terrain), பார்க் அவென்யூ (Park avenue), வுட் லண்டு (Woodland), லிவி’ஸ் (Levi’s) உள்ளிட்டவற்றையும் கிட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கான (Kids & Family) பிராண்டுகளான ட்ரென்ட்ஸ் (Trend’s), மேக்ஸ் (Max), பாட்டா (Bata), லென்ஸ்கார்ட் (Lenskart), டைட்டன் ஐ பிளஸ் (Titan Eye+) போன்ற பிராண்டுகளின் கடைகளை நவீன அலங்காரங்களுடன் நிறுவலாம்.

மேலும், ஹோம் அண்ட் டெக் (Home & Tech) நிறுவனங்களான ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance digital), பூர்விகா (Poorvika), ஐ-ப்ளானட் (iplanet), உணவு மற்றும் பானங்களில் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் கே.எஃப்.சி (KFC), பீட்சா ஹட் (Pizza Hut), கோகோ ஃபிட் (Coco Fit), டார்லிங் பேக்கிரி (Darling Bakery), அழகு மற்றும் உடல்நலன் (Beauty & Wellness) சார்ந்த பிராண்டுகளான டோனி & கைய் (Toni & Guy), நியூ யூ (New U), ஹெல்த் & க்லோவ் (Health & Glow), சுகர் (Sugar) மற்றும் பொழுதுபோக்குக்கான (Entertainment) திரையரங்குகளான PVR சினிமாஸ் (5 திரைகள்) கொண்டதையும் உள்ளடக்கி, அவற்றோடு குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குப் பிடித்த கேம் ஸோன் (Game Zone), வாகன நிறுத்துமிடம் (Parking) உள்ளிட்ட வசதிகளையும் கொண்டு அந்த மாலினை நிறுவும்போது, ஏராளமான வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருப்பதோடு, உள்ளுர் மக்களின் பொழுதுபோக்கு மற்றும் வியாபாரத் தளமாகவும் புகழடையும்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பிராண்டுகளின் பட்டியல் முழுமையானதல்ல. அவை உதாரணங்களே. அதே போன்று இன்னும் பல பிராண்டுகள் களத்தில் இருக்கின்றன. அவற்றையும் கவனத்தில்கொண்டு ஷாப்பிங் மாலை வடிவமைப்பது அவசியம். அதில் ஜூவல்லரி, அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட வேறு பல கடைகளையும் இணைக்கும்போது, வியாபாரம் சூடுபிடித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொருளதாரத்தை உயர்த்தலாம்.
(இன்னும் காண்போம்)