பெய்ஜிங்: சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்டவர் வெளியுறவு அமைச்சர் கின் கேங் (57).
இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கடந்த மூன்று வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவும் இல்லை. கின் கேங் இருப்பிடம் தொடர்பான எந்த தகவல்களையும் இதுவரை சீன வெளியுறவு அமைச்சகமும் பகிரங்கமாக வெளியிடவில்லை.
கடந்த டிசம்பரில் வெளியுறவு அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பாக கின் கேங் அமெரிக்க தூதராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
கடந்த வாரம் இந்தோனேசியாவில் நடந்த வெளியுறவு அமைச்சர்களின் சர்வதேச கூட்டம் போன்ற முக்கிய அரசு நிகழ்வுகளில் கின் கேங் கலந்து கொள்ளாதது அவரது இருப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதுகுறித்து குளோபல் டைம்ஸின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹு ஜின் கூறுகையில், “ஒவ்வொருவரும் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது பற்றி பொதுவெளியில் பகிரங்கமாக பேச முடியாது. பொதுமக்களின் தகவல் உரிமையை மதிப்பதிலும், அதனை செயலாக்குவதிலும் சமநிலையை பேண வேண்டும்”” என்று தெரிவித்துள்ளார்.