தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், மடிகையில் பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது. குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசிதான் காரணம் எனக்கூறி பெற்றோர் குற்றம் சாட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம் மடிகை கீழத்தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் -கீதா தம்பதி. இத்தம்பதிக்கு 10 மாத பெண் குழந்தைக்கு 10 -வது மாத தடுப்பூசி போடுவதற்காக துறையூர் அங்கன்வாடி மையத்துக்கு சதீஷ்குமார்-கீதா தூக்கிச் சென்றனர். அங்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு குழந்தையின் உடல் குளிர்ச்சியடைந்து, கண் அசைவின்றி இருந்தது.
இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை காசநாடுபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், குழந்தைக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால், மருத்துவர் ஒருவர் அக்குழந்தையையும், பெற்றோரையும் தனது காரில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்களின் கவனக்குறைவு, அஜாக்கிரதை காரணமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் குழந்தையின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலையத்தினர் குழந்தையின் பெற்றோர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.