பழங்குடியின பெண்களை வன்புணர்வு செய்த கும்பல் – மணிப்பூர் கலவரத்தில் அரங்கேறிய கொடூரம்

இம்பால்: மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் குழு ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இரண்டு பெண்களையும் அந்த ஆண்கள் குழு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ITLF (பழங்குடியினர் தலைவர்கள் மன்றம்) என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் குகி-சோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால், இக்கொடூர சம்பவம் மே 4ம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிற வேளையில் யாரேனும் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து மணிப்பூர் காவல்துறை இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

வன்முறை கும்பல் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்ததாகவும், அதிலிருந்து தப்பியோடிய ஐந்து பேர் கொண்ட குழுவைத் தாக்கியதாகவுபுகார் கூறப்பட்டுள்ளது. தப்பியோடிய குழுவில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் இருந்துள்ளனர். வன்முறை கும்பலால் முதலில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பின்னர் பெண்களை உடைகளை களைய கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று ITLF அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 20 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மற்ற இரண்டு பெண்கள் தப்பி ஓடிய நிலையில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் அந்த கொடூர தாக்குதலை தடுத்த நிறுத்த முற்பட்டபோது வன்முறை கும்பலால் அடித்து கொல்லப்பட்டார் என்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சம்பவத்தன்று இரண்டு பெண்களை வன்முறை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவாக உள்ளது. சமூகத்தில் வன்முறையின் அதிகபட்ச சுமையை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வன்முறை பின்னணி: மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைதேயி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மைதேயி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என மணிப்பூர் மாநில அரசை வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ம் தேதி குகி, நாகா ஆகிய பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

ஆயிரக்கணக்கான கடைகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தகைய வன்முறை காரணமாக இதுவரை 135-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அங்கு 50,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், மாநிலத்தில் நாள்தோறும் தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, வீடுகள் தீக்கிரை, ஆயுதங்கள் கொள்ளை, துப்பாக்கிச் சூடுசம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.