புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு இத்தனை வசதிகளா..? "ஃபர்ஸ்ட் கிளாஸ்"னா சும்மாவா

சென்னை:
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு (First Class) ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் செந்தில் பாலாஜிக்கு என்னென்ன வசதிகளும், சலுகைகளும் கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

செந்தில் பாலாஜியின் மனைவி சாமி தரிசனம் !

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்ய பல கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தி செந்தில் பாலாஜியை கைது செய்தது.

பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நலம் தேறியதை அடுத்து, நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடனே செந்தில் பாலாஜியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அமலாக்கத்துறை, அவரை புழல் மத்திய சிறைக்கு மாற்றியது. அங்கு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு என்னென்ன வசதிகளும், சலுகைகளும் கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு காலையில் வழக்கமான சிறை உணவுடன் கூடுதலாக சப்பாத்தி வழங்கப்படும். வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி வழங்கப்படும். நாள்தோறும் அளிக்கப்படும் பால், தேநீர் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருக்கும். சிறையில் கைதிகள் அணியும் உடைக்கு பதிலாக சாதாரண உடை அணிந்து கொள்ளலாம். தங்கும் அறையின் அளவு சற்று பெரிதாக இருக்கும்.

மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, கொசுவலை, நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்ற வசதிகள் கிடைக்கும். சிறைக் கண்காணிப்பாளர் அனுமதி அளித்தால் சிறையில் இருக்கும் பாத்திரங்களுக்கு பதிலாக வெளியே இருந்து ஹாட்பாக்ஸ், தட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். சிறை வளாகத்தில் நடத்தப்படும் கேண்டீனில் ரூ.1000 மதிப்பிலான உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். முதல் வகுப்பு கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்படும். மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள பிரத்யேக மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.