சென்னை: நடிகர் மாதவனுக்கு மூட்டை மூட்டையாக காதல் கடிதம் வந்தது என்று செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
90களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக ரசிகைகளின் மனதை கொள்ளை அடித்தவர் மாதவன். சில வருடங்களுக்கு முன் கோலிவுட் பக்கம் வராமல் இருந்த மாதவன் இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் ரித்திகாவுடன் கம்பேக் கொடுத்தார்.
அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்ததை அடுத்து, இப்போதும் தரமான படங்களை நடித்தும் இயக்கி தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில், சினிமா மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, நடிகர் மாதவன் குறித்து பல விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார். அதில் அலைபாயுதே படம் வெளியான போது, மாதவன் தமிழரே இல்லை என்றும் மணிரத்னம் வழக்கம் போல வடமாநிலத்தில் இருந்து ஒரு ஹீரோவை தமிழில் அறிமுகப்படுத்துகிறார் என்ற பேச்சு எழுந்தது.
நான் தமிழன் தான்: மாதவன் ஒரு நார்த் இந்தியன் ஹீரோ என்று பல பத்திரிக்கையில் செய்தி வெளியானதை அடுத்து, மாதவன் ஒரு பிரஸ்மீட்டை வைத்து, என் அப்பா ஆர்மி ஆபிஸராக இருந்ததால், நான் பல ஊருக்கு சென்று இருக்கிறேன். நான் படித்து, வளர்ந்தது எல்லாம் அசாம் என்பதால், என் தமிழ் உச்சரிப்பு அப்படி இருக்கிறது. மற்றபடி நான் தமிழன் தான் என்றார். மேலும், அந்த செய்தியாளர் சந்திப்பில் அனைத்து கேள்விக்கும் தமிழில் அழகாக பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
மனதை அலைபாய வைத்த மாதவன்:அலைபாயுதே படம் வெளியான போது பலரின் மனதை அலைபாய வைத்தவர் மாதவன். அலைபாயுதே படத்தில் மாதவன் ஷாலினியின் கெமிஸ்டிரி சும்மா வேறமாதிரி இருந்தது. இருவரின் நடிப்பை பார்க்கவே திரையரங்கில் கூட்டம் அலை மோதியது. டீன் ஏஜ் பெண்கள் எல்லாம் மாதவன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மாதவனுக்கு பல பெண் ரசிகர்கள் இருந்தார்கள்.
மூட்டை மூட்டையாக கடிதம்: அப்போது மாதவனை பேட்டி எடுப்பதற்காக நான் மாதவன் வீட்டுக்கு சென்று இருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு போஸ்ட் மேன், மாதவனுக்கு மூட்டை மூட்டையாக கடிதம் வந்து இருக்கு என்னால் அனைத்தையும் கொண்டு வரமுடியவில்லை. உதவிக்கு யாரையாவது அனுப்புங்க என்று கேட்டார். உடனே மாதவன் தான் உதவியாளரிடம் காரை கொடுத்து அனுப்பினார்.
ரசிகர்களை நேசித்தார்: அப்போது மூட்டை மூட்டையாக ரசிகர்கள் எழுதி கடிதம், காதல் கடிதம், போட்டோ கேட்டு கடிதம் என அனைத்து கடிதமும் மலை போல குவிந்து இருந்தது. அந்த கடிதங்களை படித்து பார்த்து பதில் எழுவதற்கு என்றே தனியாக உதவியாளர் ஒருவரை வைத்து ஒவ்வொரு கடிதத்திற்கும் பதில் எழுதினார். அந்த அளவுக்கு மாதவன் ரசிகர்களை நேசித்தார் என்று செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார்.