அனந்தபுர் :ஆந்திராவைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளி ஒருவர், தன் விடாமுயற்சி காரணமாக, பிஎச்.டி., பட்டம் பெற்ற சம்பவம், பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது.
முடிந்த உதவி
இங்கு, அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள நாகுலகுடம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கு மூன்று சகோதரிகள்.
குடும்பத்திற்கு மூத்த மகளான பாரதி, பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் மேற்படிப்பை தொடர முடியவில்லை.
இதற்கிடையே, பாரதிக்கும், தாய் வழி மாமாவான சிவபிரசாத்துக்கும் திருமணம் நடந்தது.
இருவரும் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை, கணவர் சிவபிரசாத்திடம் பாரதி கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்த அவர், மேற்படிப்புக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் உறுதி அளித்தார்.
விருப்பம்
இதையடுத்து, அனந்தபுரில் உள்ள கல்லுாரி ஒன்றில், வேதியியல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை பாரதி முடித்தார்.
பேராசிரியர்கள் ஊக்கப்படுத்தியதை அடுத்து, ஸ்ரீ கிருஷ்ணா தேவராஜ் பல்கலையில், வேதியியல் பிஎச்.டி., படிப்புக்கு அவர் விண்ணப்பித்தார். தற்போது இங்கு படித்து முடித்து, பிஎச்.டி., பட்டத்தை பாரதி பெற்றுள்ளார். இது குறித்து, பாரதி கூறியதாவது:
பல்கலையில் பேராசிரியையாக பணியாற்ற விரும்புகிறேன். கல்வி வாயிலாக மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.மேற்படிப்பை மேற்கொள்வதற்காக, பல நாட்கள் கூலி வேலை செய்து கடுமையாக உழைத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
கூலித் தொழிலாளியாக இருந்து பிஎச்.டி., முடித்துள்ள பாரதிக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்