ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `ஓப்பன்ஹெய்மர்’ (Oppenheimer). வருகின்ற ஜூலை 21ம் தேதி வெளியாக உள்ள இந்தத் திரைப்படம் சினிமா ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானை அமெரிக்காவின் காலில் விழ வைத்து, போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் ஜெ. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் பேரழிவிற்குக் காரணமான அணுகுண்டுகளைக் கண்டுபிடித்தவரும் இவர்தான். இவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் `ஓப்பன்ஹெய்மர்’. இதில் சிலியன் மர்ஃபி ஓப்பன்ஹெய்மராக நடித்துள்ளார்.
ஏராளமான மக்களின் அழிவிற்குக் காரணமாக இருந்த ஒரு வில்லனின் கதையைப் பார்க்கவா மக்கள் விரும்புகிறார்கள் என்று அதிசயமாகத் தோன்றலாம். வாழ்க்கை எனும் மேடையில் இவர் ஒரு கலைஞனாக, அறிவியல் ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, வில்லனாக, துரோகியாக, காதலனாக, மனிதாபிமானம் உள்ளவராக, இப்படிப் பல வேடங்களில் வாழ்ந்திருக்கிறார் ஓப்பன்ஹெய்மர். ஆம், ஆரம்பத்தில் வில்லனாகத் தெரியும் இவர், இந்தக் கட்டுரையின் முடிவில், ஒரு ஹீரோவாக இல்லை என்றாலும் ஒரு மனிதனாகத் தெரியலாம். இந்தப் படம் சொல்ல வருவதும் அப்படியான ஒன்றாகத்தான் இருக்கும் என்பது இதுவரை வெளியான விமர்சனங்களின் மூலம் தெரிய வருகிறது.

ஓப்பன்ஹெய்மரும் அறிவியல் ஈடுபாடும்!
ஓப்பன்ஹெய்மர் ஏப்ரல் 22, 1904ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர். இவரின் அப்பா ஜூலியஸ் ஓப்பன்ஹெய்மர், ஆடைகளை இறக்குமதி செய்து விற்பவர். அம்மா ஒரு சிறந்த ஓவியர். இதனால், இவர்கள் வீடு முழுவதும் ஏராளமான ஓவியங்களும், வண்ணங்களின் வாசனையும் நிரம்பி வழியுமாம். செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர்தான்.
ஓப்பன்ஹெய்மர் சிறு வயதிலிருந்தே அதி புத்திசாலி. கனிமங்களைச் சேகரிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம். விடுமுறைகளில் அவரது சொந்த ஊரான ஜெர்மனிக்குச் சென்றால் பாறைகளைக் கொண்டு வந்து வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்வார். ‘எத்திகல் கல்ச்சர்’ (Ethical Culture Society School) என்ற பணக்காரப் பள்ளியில் படித்திருக்கிறார். இயற்பியல், வரலாறு, கணிதம் போன்ற படிப்புகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். கவிதைகள், கிரேக்கம் மற்றும் பிரெஞ்சு இலக்கியங்களையும் விரும்பிப் படிப்பவர். மேலும், இவர் கனிமவியல் பாடத்திலும் கைதேர்ந்தவர். இவரது 12 வயதிலேயே நியூயார்க்கில் உள்ள கனிமங்கள் குழுமத்தில் கௌரவ உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
பலமும் பலவீனமும்
ஓப்பன்ஹெய்மரின் பலம் என்றால் அது அவரின் அறிவுதான். ஏனெனில், “நாம் கேள்வி கேட்கும்போதே என்ன கேள்வி கேட்போம் என்பதை முன்னமே யூகித்து அடுத்த விநாடியே அதற்குப் பதில் கூறிவிடுவார்” என்கின்றனர் அவரின் நெருங்கிய நண்பர்கள். 8 முதல் 10 மொழிகளில் கைதேர்ந்தவர். 8 நாள்களில் ஒரு மொழியையே கற்றுக்கொண்டு அதில் பாடம் எடுக்கும் அளவிற்கு அதி புத்திசாலி.
அடிக்கடி குதிரை சவாரி செய்வது ஓப்பன்ஹெய்மருக்குப் பிடித்தமான ஒன்று. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். இவர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள் முன்னணி அறிவியலாளர்களைக் கூட திணறடித்துவிடுமாம்.

அவரின் பலவீனம் என்று கேட்டால், அடிக்கடி மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது. அதிலிருந்து வெளிவருவதற்காக அளவுக்கு அதிகமாகப் புகைபிடிப்பது. சாப்பாடு மற்றும் தூக்கத்தைத் தாண்டி புகைபிடிக்கும் பழக்கத்தை அதிகம் விரும்பியிருக்கிறார் ஓப்பன்ஹெய்மர்.
இளங்கலை படிப்பைப் படித்துக்கொண்டிருக்கும் போதே முதுகலை பாடப்பிரிவையும் சேர்த்துப் படித்திருக்கிறார். நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டிய கல்லூரி படிப்பை மூன்றே ஆண்டுகளில் முடித்துவிட்டார். தனது 23வது வயதிலேயே ஆராய்ச்சிப் படிப்பையும் முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்.
கல்லூரியும் காதலும்
1929ல் உதவிப் பேராசிரியராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது இந்தப் பல்கலைக்கழகம் அமெரிக்காவிலேயே மிகச் சிறந்த கோட்பாட்டு அறிவியல் நிறுவனமாகச் செயல்படுகிறது. இதற்கான பெரும் பங்கு இவரையே சாரும்.
ஓப்பன்ஹெய்மர் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய சமயத்தில், ஜீன் டாட்லாக் என்பவரைச் சந்தித்து காதல் கொண்டார். இவர்களது காதல் மூன்று வருடங்கள் நீடித்தன. அதன் பின்பு ஜீன் டாட்லாக் கம்யூனிசத்தைப் பின்பற்றுகிறவர் என்று அறிந்தவுடன் அவரைப் பிரிந்துவிட்டார்.
ஓப்பன்ஹெய்மர் ஆசிரியராக இருந்தபோது, மாணவர்களுடன் நெருங்கிப் பழகினார். அவர்களுடன் சாப்பிடுவது, பார்ட்டிக்குச் செல்வது என்பதாகவே இருந்துள்ளார். ஆனால், படிப்பு என்றால் மட்டும் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார்.

மன்ஹாட்டன் திட்டம்
அதன்பிறகு கேத்தரின் என்பவரைச் சந்தித்து காதல் கொண்டு கல்யாணமும் செய்து கொள்கிறார் ஓப்பன்ஹெய்மர். அவருக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் நடந்தது. இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது.
அமெரிக்கா தன் நாட்டின் பலத்தை ஜெர்மனியிடம் நிரூபிப்பதற்காக ஒரு சக்தி வாய்ந்த அணுகுண்டைத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தது. அதற்காக ‘மன்ஹாட்டன்’ என்ற திட்டத்தை அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் யாருக்கும் தெரியாமல் தீட்டினார். ஓப்பன்ஹெய்மரின் தலைமையில் லாஸ் அலமோஸ் (Los Alamos) என்ற இடத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. ஓப்பன்ஹெய்மர் அணுகுண்டை உருவாக்குவதற்காக ஒவ்வொரு நாளும் தீவிரமாக உழைத்தார். இறுதியாக அதில் வெற்றியும் கண்டார். யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் அணுகுண்டுகள் தயாராகின.
ஓப்பன்ஹெய்மரும் பகவத் கீதை வாசகமும்
யுரேனியம் அணுகுண்டு நிச்சயமாக வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால், புதிதாகக் கண்டுபிடித்த புளூட்டோனியம் அணுகுண்டைச் சோதித்துப் பார்க்க முடிவு செய்தார்கள். இந்தச் சோதனைக்கு ஓப்பன்ஹெய்மர் ட்ரினிட்டி (Trinity) என்ற பெயரைச் சூட்டினார். Trinity என்பது ஒரு கவிதையின் பெயர் ஆகும். இதுவே உலகின் முதல் நியூக்ளியர் டெஸ்ட். அவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சோதனையும் இதுதான்.
இதன் பிறகு, ஹிரோஷிமா, நாகசாகி மீது இந்த அணுகுண்டுகள் வீசப்பட்டன. இந்த இரண்டு அணுகுண்டுகள் காரணமாக ஏற்பட்ட விளைவுகளை நேரடியாகப் பார்த்து மிகவும் வருந்தினார் ஓப்பன்ஹெய்மர். மிகப்பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று ஆழ்ந்த மனஅழுத்தத்திற்கு ஆளானார். பகவத் கீதையில் இருந்த “நானே மரணமும், உலகத்தை அழிக்க வந்தவனும்…” என்ற வாக்கியத்தை உலகம் முழுக்கப் பரப்பினார். பிறகு, அந்த ஆராய்ச்சியிலிருந்து வெளிவந்து மீண்டும் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதே சமயத்தில் ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்தது.

அமெரிக்கா, தங்களுக்குள் ரஷ்ய உளவாளிகள் இருக்கிறார்களா என்று பரிசோதனை செய்கிறார்கள். அதில் ஓப்பன்ஹெய்மர் தெரியாமல் சிக்கிக் கொண்டார். எந்த அமெரிக்கா இவரை அணுவின் தந்தை என்று அழைத்ததோ, அதே அமெரிக்கா இவரை ரஷ்யாவின் தூதன் என்று முத்திரை குத்தி அசிங்கப்படுத்தி வெளியில் அனுப்பியது. இதைத் தொடர்ந்து தன் வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ ஆரம்பித்தார் ஓப்பன்ஹெய்மர். நிறைய ஊர்களுக்கும், வித்தியாசமான இடங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார். நியூக்ளியர் சோதனையை எதிர்த்து பலமுறை பிரசாரம் செய்திருக்கிறார். வாழ்க்கையின் அனுபவங்கள் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றிவிடுகிறது?!
1960ல் இவர் உளவாளி கிடையாது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு இவருக்கு விருதும் பணமும் கொடுத்துக் கௌரவித்தனர். ஆனால், இவரின் அளவிற்கு அதிகமான புகைபிடித்தல் பழக்கத்தால் தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு 1967ல் இயற்கை எய்தினார். அவரின் சாம்பலை அவருக்குப் பிடித்த ஒரு கடற்கரையில் கரைத்ததுடன் அதற்கு ‘ஓப்பன்ஹெய்மர் கடற்கரை’ என்று பெயரும் சூட்டினர். அவரின் படிப்பும், துடிப்பான ஆர்வமும்தான் இது போன்ற கண்டுபிடிப்புகளுக்குக் காரணம். ஆனால் அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டதில் அவரின் பங்கு குறைவே.

அணுகுண்டு என்றில்லை, எந்த விதமான அறிவியல் கண்டுபிடிப்பும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அதற்காக அதைக் கண்டறிந்தவரைக் குற்றம் சொல்லிவிட முடியாது அல்லவா?! எனவே ஓப்பன்ஹெய்மர் ஹீரோவா, வில்லனா என்பது அவரவரின் பார்வையைப் பொறுத்ததே!