Protests of Indian origin in Germany | இந்திய வம்சாவளியினர் ஜெர்மனியில் போராட்டம்

பிராங்பேர்ட்:ஜெர்மனி அரசுக் காப்பகத்தில் உள்ள, இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை அரிஹா ஷாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி, அந்நாட்டில், இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர்.

நம் நாட்டின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாவேஷ் ஷா- என்பவர், மனைவி தாரா உடன், தொழில் நிமித்தமாக, மேற்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சென்றார்.

இந்த தம்பதிக்கு, அரிஹா ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில், குழந்தை அரிஹா ஷாவுக்கு, பிறப்புறுப்பில் ரத்தம் கசிந்தது.

இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன் பின், குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி, பெற்றோரிடம் இருந்து, குழந்தையை, ஜெர்மனி அரசின் குழந்தைகள் நல அமைப்பு பறித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் நடந்தபோது, அரிஹா ஷா ஏழு மாத குழந்தை. குழந்தையை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, பாவேஷ் ஷா – தாரா தம்பதி இரண்டு ஆண்டுகளாக, பாசப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த விவகாரம் தொடர்பாக, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசினார்.

மேலும், நம் வெளியுறவுத் துறை அமைச்சகமும் பலமுறை வலியுறுத்தியது. இந்நிலையில், காப்பகத்தில் உள்ள இரண்டு வயது குழந்தை அரிஹா ஷாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி, ஜெர்மனியின் பிராங்பேர்ட் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர்.

நம் நாட்டின் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய அவர்கள், ‘அரிஹாவை காப்பாற்றுங்கள் மோடிஜி; அவள் ஓர் இந்தியக் குழந்தை’ என்ற பேனர்களையும் ஏந்தியிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.