புதுடில்லி, ஆட்கொணர்வு மனு தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பொறியாளர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
பணம் பெற்று பணி வழங்காமல் ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் அவரை கடந்த மாதம் 13ம் தேதி கைது செய்தனர்.
அப்போது, உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதய அறுவை சிகிச்சைக்குப் பின், செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, கைது சம்பவத்தின் எதிரொலியாக அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து, மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த வழக்கை மூன்றாவதாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.
‘அவர் சட்டத்திற்கு உட்பட்டவர் தான். குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும். அவர் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல’ என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement