பெங்களூரு,
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக களமிறங்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு, ‘இந்தியா’ என, புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. கூட்டணியை தொடர்ந்து வழிநடத்த, 11 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்க, கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க, எதிர்க்கட்சிகள் திரண்டுள்ளன. இதன்படி, எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று முன்தினம் துவங்கியது.
இதில், 26 கட்சிகள் பங்கேற்றன. இரண்டாவது நாளான நேற்று, கூட்டணியில் இணைந்து செயல்படுவது குறித்து, இந்தக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 26 கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக, பா.ஜ.,வை வீழ்த்துவதற்கு, கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர்.
பல முடிவுகள்
அப்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு, ‘இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டது. அதாவது, ஐ.என்.டி.ஐ.ஏ., எனப்படும், இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது.
இதையடுத்து, மாலை 4:30க்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றவும், மக்கள் நலன் காக்கவும் இது ஒரு முக்கியமான கூட்டம். இந்த கூட்டத்தில், 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, ஒருமித்த கருத்துடன் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
முன்னதாக நாங்கள், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி’ என்று பெயர் வைத்திருந்தோம். இப்போது இந்த கூட்டணிக்கு, ‘இந்தியா’ எனப்படும், ‘இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிரசாரம், ஒருங்கிணைந்த தேர்தல் வாக்குறுதிகள் உட்பட பல்வேறு முடிவுகளை எடுக்க, 11 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் அடுத்த கூட்டம் கூடி, இதற்கான உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவர்; இதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.
கூட்டணிக்கு தலைமை, தொகுதி பங்கீடு உட்பட பல முக்கிய முடிவுகள் குறித்து, 11 பேர் குழுவில் முடிவு செய்யப்படும். பா.ஜ.,வால் மாநில கட்சிகளிடையே பிளவு ஏற்படுத்தி, எம்.எல்.ஏ.,க்களை அழைத்துச் செல்ல முடியும். ஆனால், மக்களை ஒன்றும் செய்ய முடியாது.
அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்த, புதுடில்லியில் கூட்டணியின் செயலகம் அமைக்கப்படும்.
பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில், 15 கட்சிகள் பங்கேற்ற நிலையில், பெங்களூரு கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். எங்கள் கூட்டத்தைப் பார்த்து பிரதமர் நரேந்திர மோடி, 30 கட்சிகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை நடத்தினார்.
நம் நாட்டில் இத்தனை கட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. அவர்களில் எத்தனை பேர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர் என்பதும் தெரியாது.
இத்தனை நாட்களாக பா.ஜ., தன் கூட்டணி கட்சிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து அக்கட்சி பயப்படுகிறது.
இங்கு இருக்கும் தலைவர்கள், எந்த அதிகார ஆசைக்கும் வரவில்லை. நாட்டு மக்களின் பிரச்னைகளை தீர்ப்பது, நாட்டு நலனுக்காக போராடுவது என்ற நோக்கத்தை உடையவர்கள்.
சவால்
என் பல ஆண்டு அரசியல் வாழ்க்கையில், எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக ஊடகங்கள் செயல்பட்டதை நான் பார்த்ததில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேசியதாவது:
உண்மையான சவால் தற்போது தான் துவங்கி உள்ளது. 26 கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், உத்தர பிரதேசம், டில்லி, மேற்கு வங்கம், பீஹார், மஹாராஷ்டிரா என எல்லா இடங்களிலும் மத்திய பா.ஜ., அரசால் ஆபத்து உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தகர்ப்பதே, பா.ஜ., அரசின் வேலை. எனவே, நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்து உள்ளோம். பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள முடியுமா?
எதிர்க்கட்சித் தலைவர்கள் யாராவது குரல் எழுப்பினால், அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு சோதனை நடத்தப்படுகிறது. நம் போரில் இந்தியா வெல்லும்; பா.ஜ., தோற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நாட்டுக்காக உழைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஆனால், அவர் எந்தத் துறையையும் முன்னேற்றம் அடையச் செய்யவில்லை. ரயில்வே, பொருளாதாரம், விமான நிலையம், நிலம், வானம் என அனைத்தையும் விற்று விட்டார்.
நாட்டின் நலனை பேணவும், புதிய இந்தியாவை கட்டியெழுப்பவும், மகிழ்ச்சி, அமைதி நிலவும் நல்லிணக்க இந்தியாவை நிறுவவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது:
எங்களின் போராட்டம், பா.ஜ.,வின் கொள்கைக்கும், அவர்களின் சிந்தனைக்கும் எதிரானது. அவர்கள் நாட்டை ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த போராட்டம், பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான போராட்டம் அல்ல; இது, நாட்டின் குரலுக்கான போராட்டம். அதனால் தான், இந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டது.
இந்த போராட்டம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மோடிக்கும் எதிரானது. இந்தியாவுக்கு எதிராக யார் வெற்றி பெறுவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவை பாதுகாக்கும் போராட்டம்
எங்களின் போராட்டம், பா.ஜ.,வின் கொள்கைக்கும், அவர்களின் சிந்தனைக்கும் எதிரானது. அவர்கள் நாட்டை ஆக்கிரமித்துள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் பரவி, நாட்டின் மொத்த செல்வமும், ஒரு சில தொழிலதிபர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்த போராட்டம், பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான போராட்டம் அல்ல; இது, நாட்டின் குரலுக்கான போராட்டம். அதனால் தான், இந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டது.இந்த போராட்டம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மோடிக்கும் எதிரானது. இந்தியாவுக்கு எதிராக யார் வெற்றி பெறுவர் என்பது அனைவருக்கும் தெரியும்.ராகுல்காங்., முன்னாள் தலைவர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்