ஓங்கும் உதயநிதியின் கை: ஸ்டாலின் கொடுத்த ஹிண்ட்! தயாராகும் திமுக வேட்பாளர்கள் பட்டியல்!

திமுக இளைஞரணியின் 44ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இளைஞர் அணியினரை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியையும் வாழ்த்திய ஸ்டாலின் அவர் முன்னெடுத்த திராவிட மாடல் பாசறை கூட்டங்கள் பற்றி குறிப்பிட்டார்.

மேலும் அவர், “இந்தியாவைக் காக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். கழக அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் பரப்புரை செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் தேர்தல் பணி என்பது திட்டமிட்டுச் செய்ய வேண்டியது ஆகும். அந்த தேர்தல் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இளைஞரணிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் கற்றுத்தர வேண்டும். இதற்கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்களுக்கும் வழங்குமாறு இளைஞரணிச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் இளைஞர் அணியின் பங்களிப்பை அதிகம் எதிர்பார்க்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதற்கு உள்ளார்ந்த அர்த்தம் இருக்கிறது என காது கடிக்கின்றனர் இளம் உடன் பிறப்புகள்.

“கட்சியிலும் ஆட்சியிலும் இளைஞர் அணிக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலினே அமைச்சர் உதயநிதிக்கு முக்கிய சில பணிகளை கவனிக்குமாறு அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறார். அதிகாரிகளும் முதல்வரிடம் ஆலோசனை நடத்துவது போல் அமைச்சர் உதயநிதியிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் வழங்கிய நலத்திட்ட உதவிகள்

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே இளைஞரணி நிர்வாகிகள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சட்டமன்றத்தில் உதயநிதி ஆதரவு அணி ஒன்று வலுவாக உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் இளைஞரணி நிர்வாகிகளை அதிகளவில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இவர்களில் யாரை டெல்லிக்கு அனுப்பினால் சிறப்பாக செயல்படுவார்கள் என்றொரு லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது. அவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில் மாவட்டச் செயலாளர்கள் யாரும் அதிருப்தி அடைந்து விடக்கூடாது என்பதிலும் முதல்வர் கவனமாக இருக்கிறார். இளைஞரணியின் பங்களிப்பு, பிரச்சாரத்தில் மட்டுமல்லாமல் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பிலும் இருக்கும்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.