தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: நெல்லை பறக்கும் வந்தே பாரத் ரயில்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ள நிலையில் அதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு!

வந்தேபாரத் ரயில்களை பல்வேறு வழித்தடங்களில் இந்தியன் ரயில்வே இயக்கி வருகிறது. வழக்கமான ரயில்களைவிட அதிக வசதிகள், சொகுசான, விரைவான பயணம் என்பதால் அதிக கவனம் பெறுகிறது. இருப்பினும் கட்டணம் சற்று அதிகமாக இருப்பதால் மற்ற மாநிலங்களில் குறைந்த வேகத்தில் டிக்கெட்டுகள் புக்காகி வருகின்றன. ஆனால் தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மக்கள் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு நகருக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த இரு ரயில்களிலும் பயணிக்க பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த இரு வந்தே பாரத் ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு 100 சதவீதத்தை விட அதிகமாக இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் கூறுகின்றனர்.

நெல்லைக்கு எவ்வளவு நேரத்தில் செல்லலாம்?

இந்த வரவேற்பைத் தொடர்ந்து தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவது தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக பிற ரயில்களில் நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்ல 11 மணி நேரம் ஆகும் என்றால் இந்த ரயிலில் 8 மணி நேரத்தில் பறந்துவிடலாம்.

மின்சார சுற்றுலா ரெயில் புதுச்சேரி ரெயில் நிலையத்துக்கு வந்த்து

நெல்லை டூ சென்னை

சென்னையிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ரயில்களில் பெரும்பாலானவை இரவு நேரங்களில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் பகல் நேரத்தில் பயணிக்கும். காலை 6 மணிக்கு நெல்லையில் கிளம்பும் ரயில் மதியம் 2 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் மாலை 3 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு 11 மணிக்கு மீண்டும் நெல்லையை வந்தடையும் என்று ரயில்வே வட்டாரங்களில் கூறப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் சேவை எப்போது?

இந்த ரயில் சேவை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகின்றன. இவை பயன்பாட்டுக்கு வரும் போது தென் மாவட்ட மக்கள் எளிதாக, சொகுசாக, விரைவாக பயணம் மேற்கொள்ள முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.