புதுடில்லி, புதுடில்லி நிர்வாக அதிகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் புதுடில்லி அரசும், மத்திய அரசும், அக்கறையின்றி செயல்படுவது வருத்தம் அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
புதுடில்லியில் குடிமைப்பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட நிர்வாக அதிகாரங்களை துணை நிலை கவர்னருக்கு அளிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் புதுடில்லி அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் உடைய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதை தொடர்ந்து, புதுடில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தலைவர் நியமனம் செய்வது தொடர்பாக விவாதம் நடந்தது.
அப்போது, புது டில்லி துணைநிலை கவர்னர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிடு கையில், ”புதுடில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவரை ஜனாதிபதி நியமிப்பார்.
”இது ஏற்புடையது இல்லை எனில், நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கலாம் அல்லது அவரே தொடர அனுமதி அளிக்கலாம்,” என்றார்.புதுடில்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ”புதுடில்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு நடந்து வரும் நிலையில், இந்த நியமனத்தை எப்படி ஏற்க முடியும்,” என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்து முடிக்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம்.
”அதுவரை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தலைவர் இன்றி செயல்படுமா,” என, கேள்வி எழுப்பினர்.இந்த நியமன விவகாரத்தில், புதுடில்லி துணைநிலை கவர்னரும், முதல்வரும் ஒருமித்த கருத்தை எட்ட முடியாத நிலை இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ”அரசு நிறுவனம் குறித்து இரு தரப்புமே அக்கறை இன்றி இருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவரை அவர்களே நியமிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்