கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ்- காளியம்மாள் தம்பதியினரின் மகன் ராஜேஷ்குமார் (39). பாலிசிஸ்டிக் கிட்னி நோய் பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று முன்தினம் (ஜூலை 20) உயிரிழந்தார். இந்நிலையில் ராஜேஷ்குமாரின் உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனையே காரணமே என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மேலும், அரசு மருத்துவமனையில் மருந்துகளை வெளியில் வாங்குமாறு மருத்துவர்கள் கூறியதாகவும், லஞ்சம் கேட்பதாகவும், செவிலியர்கள் முறையாக நோயாளிகளை கவனித்துக் கொள்வதில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் டீன் நிர்மலா நேற்று (ஜூலை 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜேஷ்குமாருக்கு கடந்த 8 ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. 4 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தமும் உள்ளது. பாலிசிஸ்டிக் கிட்னி நோய் பாதிப்புக்காக இங்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, பல மருத்துவமனைகளில் ராஜேஷ்குமார் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் கடந்த ஜூன் 5-ம் தேதிதான் முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். வரும்போதே, மோசமான நிலைமையில்தான் இருந்தார்.
பரிசோதனையில் யூரியா, கிரியேட்டின் அளவு அதிகமாக இருந்தது. மூச்சுத்திணறலுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்டபிறகு அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதனால், அவரது உடல்நிலை சற்று தேறி வந்துள்ளது.
மரபணு பரிசோதனை: பாலிசிஸ்டிக் கிட்னி நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக 50 வயதுக்கு மேல் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். ஆனால், ராஜேஷ்குமாருக்கு விரைவாக பாதிப்பு ஏற்பட்டாதல், மரபணு பரிசோதனை செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அந்த பரிசோதனையில் அவருக்கு 2 ஜீன்கள் அப்-நார்மலாக இருந்தன. இதுபோன்ற சூழலில் நோயாளியை குணப்படுத்துவது என்பது சிரமம்.
கடந்த ஜூன் 20-ம் தேதி வீடு திரும்பிய ராஜேஷ்குமார், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவதாக கடந்த ஜூலை 12-ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சர்க்கரை அளவு 338 என்ற அளவில் இருந்துள்ளது. ஹீமோகுளோபின் அளவு 5.7-ஆக இருந்தது. எனவே, 2 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டு, உடல்நிலையை சீராக்கியுள்ளனர். அதன்பிறகு, கடந்த ஜூலை 15, 18, 20-ம் தேதிகளில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இணைநோய்களும் காரணம்: மருத்துவர்கள் எவ்வளவு நன்றாக பார்த்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு நன்றாக பார்த்துக்கொண்டனர். சிகிச்சையில் எந்த குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை. அவருக்கு இருந்த பாலிசிஸ்டிக் கிட்னி நோய் பாதிப்பு, கட்டுக்குள் இல்லாத இணை நோய்கள் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். பாலிசிஸ்டிக் கிட்னி நோய் என்பது முழுமையாக குணப்படுத்தக்கூடிய நோய் அல்ல. வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும். இந்நோய் பாதித்தால் இறுதியில் சிறுநீரக செயலிழப்புதான் ஏற்படும்.
எல்லாவற்றுக்கும் பணம் வாங்குவதாகவும் ராஜேஷ்குமாரின் தந்தை தெரிவித்துள்ளார். பொத்தம் பொதுவாக கூறினால் நடவடிக்கை எடுக்க இயலாது. யார், எப்போது, எவ்வளவு வாங்கினார்கள் என தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். ஸ்கேன் எடுக்க பணம் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். சி.டி.ஸ்கேன் யார் எடுத்தாலும் பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மருந்துகள் வெளியில் வாங்க சொல்லப்பட்டதா?: மருந்துகளை வெளியில் வாங்கச் சொல்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மருந்துகளை வெளியில் வாங்கச் சொல்வது என்பது கோவை அரசு மருத்துவமனையில் இல்லவே இல்லை. அதுபோன்று வாங்குமாறு தெரிவித்தால், நோயாளிகளின் உறவினர்கள் என்னிடம் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை அத்தியாவசிய மருந்து உடனே இல்லையென்றாலும், வாங்கிக் கொடுத்துள்ளோம். மருத்துவமனையில் அனைத்து மருந்துகளும் உள்ளன. தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மருந்துகள் இருப்பு குறித்து கூட்டம் நடத்தி, குறைவாக உள்ளவதற்றை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என டீன் நிர்மலா தெரிவித்தார்.