மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகளின்மீது தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை ஏவிவருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றன. டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள், மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள்மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி ஆகிய அமைச்சர்கள்மீதும் அமலாக்கத்துறை பழைய வழக்குகளைக் கையில் எடுத்து விசாரித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்குள்ளேயே பேச வேண்டிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசிவிட்டு, உள்ளே மௌனம் காக்கிறார். இது ஜனநாயகப் படுகொலை. மணிப்பூரில் மிகப்பெரும் கலவரம் நடந்துகொண்டிருக்கும்போது, உலகின் எல்லா நாடுகளும் மணிப்பூரை கவனித்துக்கொண்டிருந்தன. கவலைப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால், பிரதமர் மோடி உல்லாசமாக வெளிநாடுகளுக்குச் சென்று, அந்தத் தலைவர்களைக் கட்டிப்பிடித்து ஆறுதல் பெறுகிறார் என்றால், இவர் மனித சமுதாயத்தைச் சார்ந்தவரா எனக் கேள்வி எழுகிறது.

எதிர்க்கட்சிகளின்மீது பாயும் இதே அமலாக்கத்துறை, பிரதமர் மோடிமீதும் பாயும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. எதிர்க்கட்சிகள்மீதான குற்றச்சாட்டுகளுக்கு, அமலாக்கத்துறை சில இடங்களில் வெறும் சோதனைதான் செய்கிறது. ஆனால், பிரதமர் மோடிமீது பல கிரிமினல் குற்றங்கள் இருக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித ஷாவின் மகன் 10 வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தார்… இப்போது எப்படி இருக்கிறார் என்பதைதான் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறதே! அதானிக்குச் சவால்விடும் அளவுக்கு அமித் ஷாவின் மகன் பணம் சேர்த்திருக்கிறார்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.