வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை, மற்றவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுவெளியில் நீதித்துறை மீது விமர்சனம் ஏற்படுத்தும் வகையிலும் பயன்படுத்தக்கூடாது என அனைத்து மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளார்.
உ.பி., மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கவுதம் சவுத்ரி, இவர் கடந்த 14 ல் டில்லியில் இருந்து உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகருக்கு ரயிலில் சென்ற போது அசவுகரியம் ஏற்பட்டதாகவும், அது குறித்து விளக்கம் அளிக்கும்படி நீதிமன்ற பதிவாளர் மூலம் ரயில்வே அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அந்த நோட்டீசில், ரயில் 3 மணி நேரம் தாமதமாக வந்தது குறித்தும், டிடிஇ-யிடம் பல முறை தெரிவித்தும் நீதிபதியின் தேவை குறித்து கேட்க யாரும் வராதது குறித்தும் விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டு இருந்தது.

கடிதம்
இந்நிலையில் அனைத்து மாநில தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அனுப்பி உள்ள கடிதம்: நீதித்துறையின் புத்திசாலித்தனமான செயல்பாடு என்பது, நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நீதித்துறையின் நம்பகத்தன்மையையும், சட்டப்பூர்வமான தன்மையையும் நிலைநிறுத்துகிறது. நீதித்துறை மீதும் சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும்.
நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை, ‛சமூகத்தில் இருந்து அவர்களை வேறுபடுத்தி காட்டுவதற்கும் அல்லது அதிகாரத்தின் வெளிப்பாடாகவும் பயன்படுத்தக்கூடாது.
ரயில்வே ஊழியர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அதிகாரம் இல்லை.எனது கவலையை உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து சக நீதிபதிகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் இதை எழுதுகிறேன். நீதித்துறைக்குள் சுய சிந்தனை மற்றும் ஆலோசனை அவசியம். இவ்வாறு அந்த கடிதத்தில் சந்திரசூட் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement