தன்னையே மொத்தமாக அழித்துக்கொள்ளும் பேராற்றலை மனித இனத்தின் கையில் கொடுத்த ஒரு மனிதனின் எழுச்சி, அதற்காக அவர் கொடுத்த விலை, எந்த ஒரு மனிதனையும் தேவையென்றால் தூக்கி எறியும் அதிகார இயந்திரத்தின் அரசியல் எனப் பலவற்றைப் பேசுகிறது, பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் கிறிஸ்டோபர் நோலனின் `ஓப்பன்ஹெய்மர்’.
‘அணுகுண்டின் தந்தை’ என அழைக்கப்படும் ராபர்ட் ஜெ ஓப்பன்ஹெய்மரின் கதையை நான்-லீனியர் முறையில், இரண்டு காலகட்டங்களில் நடக்கும் விசாரணைகள் மூலம் கட்டவிழ்த்திருக்கிறார் நோலன். ஒன்று 1954-ல் நடப்பது. உலகப்போர் முடிந்து சோவியத் ரஷ்யாவுடன் பனிப்போரில் இருக்கும் அமெரிக்கா, இடதுசாரி சிந்தனைகள் கொண்ட ஓப்பன்ஹெய்மர் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தான நபரா என விசாரணை செய்கிறது. அந்த விசாரணையில் ஓப்பன்ஹெய்மர் கொடுக்கும் வாக்குமூலங்கள் மூலம் அணுகுண்டு உருவாக்கத்திற்கு முன்னான அவரது வாழ்க்கை திரையில் விரிகிறது. மற்றொரு விசாரணை 1958-ல் அமெரிக்க வணிகத்துறையின் செயலாளராக நியமிக்கப்படவிருக்கும் லூயிஸ் ஸ்ட்ராஸிடம் அமெரிக்க செனட் நடத்துவது. அமெரிக்காவின் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த அவரிடம் ஓப்பன்ஹெய்மர் பற்றிய கேள்விகள் கேட்கப்படுகிறது. ஸ்ட்ராஸின் பதில்கள் மூலமாக அணுகுண்டு உருவாக்கத்திற்கு பின்னான ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வெளிச்சத்துக்கு வருகிறது. அணுகுண்டு உருவாக்கம் எப்படி நடந்தது, குற்ற உணர்ச்சியுடனான அவரது போர், அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் பாமின் உருவாக்கத்திற்கு எதிரான அவரது நிலைப்பாடு, அந்த நிலைப்பாட்டால் அவர் சந்திக்கும் விளைவுகள் என ஏகப்பட்ட விஷயங்களை மூன்று மணிநேர படத்தில் சொல்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.

‘அமெரிக்கன் ப்ரோமித்தியஸ்’ என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு இந்த படத்துக்கான திரைக்கதையை எழுதியிருக்கிறார் நோலன். நோலன் படங்கள் என்றாலே பின்னிணைப்பாக ‘படம் புரியுமா?’ என்ற சந்தேகமும் பலருக்கும் எழும். இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனட் போன்ற படங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் எளிமையான கதை கொண்ட ஒரு படமாகவே இது இருக்கிறது. அணுகுண்டு உருவாக்கத்தில் ஈடுபடும் ஒரு விஞ்ஞானியின் கதை என்றாலும் அந்த அறிவியலைச் சொல்லும் படமாக இல்லாமல், மனிதனாக அவரது வாழ்க்கையைப் பேசி, அவரது உணர்வுகளை நமக்குக் கடத்தும் படமாக ‘ஓப்பன்ஹெய்மர்’ இருப்பதே இதற்கு முக்கிய காரணம். இதுவரை அவர் எடுத்திருக்கும் படங்களிலேயே அதிக அரசியல் பேசிய படமாகவும் இதுவே இருக்கும். இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அமெரிக்கா எந்த அளவில் கண்காணித்தது, அதைக் கொண்டு ஒருவரை மொத்தமாக எப்படி காலி செய்தது எனப் பல விஷயங்களைத் துணிந்து காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அதிபர் ட்ரூமனை ஓப்பன்ஹெய்மர் சந்திக்கும் காட்சி, எந்த ஜப்பான் நகரங்களில் அணுகுண்டுகளை வீசலாம் என அதிகாரிகள் விவாதிக்கும் காட்சி என அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை அரசியல் நையாண்டியும் செய்திருக்கிறார்!

ஓப்பன்ஹெய்மராக சிலியன் மர்ஃபி. இன்செப்ஷன், டார்க் நைட், டன்கிர்க் என ஏற்கனவே நோலன் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு இது வாழ்நாள் கதாபாத்திரம். கௌபாய் தொப்பி, சிகார் பைப்புடன் நிஜ ஓப்பன்ஹெய்மரின் தோற்றத்தை மட்டுமல்லாமல் அவரது உடல்மொழியையும் அப்படியே திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார் சிலியன் மர்ஃபி. குவாண்டம் பிசிக்ஸ் மீது பேரார்வம் கொண்ட துடிப்பான இளைஞராக, பாசிச சக்திகளை வேரறுக்க இதுவே வழி என ஓயாமல் உழைக்கும் நடுத்தர வயது மனிதனாக, அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைச் சொல்லும் முதிர்ச்சியுடையவராக எனப் படம் முழுக்க ஓப்பன்ஹெய்மராகவே வாழ்ந்திருக்கிறார். அறம் சார்ந்து உள்ளெழும் கேள்விகளுடன் அவர் நடத்தும் போராட்டம், எப்போதும் ஒரு பெருவெடிப்புக்கு நடுவில் சிக்கித்தவிப்பதாக இருக்கும் அவரது உளவியல் என அனைத்தையும் அவரது கண்களிலேயே நம்மால் பார்த்துவிட முடியும். நான்-லீனியர் முறையில் கதை சொல்லப்பட்டதால் உடளவில் அவர் போட்டிருக்கும் அபார உழைப்பைப் பலரும் கவனிக்காமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது.
ஹிரோஷிமா, நாகசாகியில் குண்டுகள் வீசப்பட்டதற்குப் பிறகு, தனது குழுவினரின் ஆரவாரத்திற்கு இடையே மேடையேறி அவர் பேசும் அந்த காட்சி இந்த ஆண்டின் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கக்கூடும். இந்த ஆண்டு அனைத்து முக்கிய விருது விழாக்களிலும் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் நிச்சயம் சிலியன் மர்ஃபி பெயர் இடம்பெறும் என இப்போதே ஊர்ஜிதமாகச் சொல்லிவிடலாம்.
அவருக்கு இணையாக நடிப்பில் மிரட்டுகிறார் லூயிஸ் ஸ்ட்ராஸாக வரும் ராபர்ட் டௌனி ஜூனியர். படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை தாங்கிப்பிடிப்பது இவரது நடிப்புதான். முக்கிய கதாபாத்திரத்தில் ராணுவ அதிகாரியாக கவர்கிறார் மேட் டேமன். ஓப்பன்ஹெய்மரின் மனைவி கிட்டியாக வரும் எமிலி பிளன்ட் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஃபுளோரன்ஸ் ப்யூ, ரமி மாலிக் என நமக்கு பரிட்சயமான ஹாலிவுட் முகங்கள் படம் முழுக்க நிரம்பியிருக்கின்றன. அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாகவே நம் மனதில் பதிவது படத்தின் பெரிய பிளஸ்!

பெருமளவில் வசனங்களால் நகர்த்தப்படும் டிராமாவாக படம் இருப்பதால் இன்னும் கூடுதல் மெனக்கெடலுடன் எழுதப்பட்டிருக்கின்றன வசனங்கள். சாதாரண காட்சியையும் சிறப்பான காட்சிகளாக மாற்றுவது அவைதான். முந்தைய நோலன் படங்களில் நாம் பெரிதும் பார்க்காத அம்சம் இது. அவர் படங்களில் ஒழுங்காக வசனங்கள் கேட்பதில்லை என இதற்கு முன்பு ரசிகர்கள் புகார் வைத்ததுண்டு. அசாத்திய ஆக்ஷன் காட்சிகளைப் பதிவுசெய்யும் ஐமேக்ஸ் கேமராக்கள் இம்முறை நடிகர்களின் முகத்தில் நிகழும் சின்ன சின்ன அசைவுகளைப் படம்பிடிக்கப் பயன்பட்டிருக்கின்றன. அதிக க்ளோஸ்-அப் ஷாட்ஸ் கொண்ட நோலன் படமாகவும் இதுவே இருக்கும். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பெரிதும் பேசப்பட்ட அந்த அணுகுண்டு சோதனை காட்சியும், அது படமாக்கப்பட்ட விதமும் சிறப்பு. அத்தனை பெரிய வெடிப்பு திரையில் நிகழும்போதும், அந்த பிரமிப்பில் திளைக்காமல் இப்போது ஓப்பன்ஹெய்மர் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும் என நம்மை யோசிக்கவைப்பதில் ஒரு இயக்குநராக வெற்றிகாண்கிறார் நோலன். அவரது இந்த நோக்கத்தை செயல்படுத்தியதில் ஒளிப்பதிவாளர் ஹோய்டே வான் ஹோயட்டேமா மற்றும் எடிட்டர் ஜெனிஃபர் லேமுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. பரபரப்பைக் கூட்டும் லூட்விக் கோரன்ஸனின் இசை படத்துக்கு முக்கிய பலம்.
தான் இறங்கி அடிக்கும் ஏரியாவில் இருந்து கொஞ்சம் வெளியில் வந்து, அதே சமயம் தனது பலங்கள் எதையும் விட்டுவிடாமல் தான் இன்னும் ப்ரைம் ஃபார்மில்தான் இருக்கிறேன் என்பதை இந்தப் படம் மூலம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் நோலன். அவரது 12 படங்களில் மிக முக்கியமான படமாக ‘ஓப்பன்ஹெய்மர்’ காலத்துக்கும் பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

படம் பார்ப்பதற்கு முன், ஓப்பன்ஹெய்மர் பற்றி விக்கிப்பீடியாவில் படித்துவிட்டுச் செல்லவேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. சொல்லப்போனால் அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் படம் பார்த்தால் இன்னும் சிறப்பான அனுபவமாகப் படம் அமையும். ஆனால், இரண்டாம் உலகப்போர் பின்னணி, அப்போது இருந்த அறிவியல் மேதைகள் யார் யார், அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் பகை குறித்த அடிப்படையைக் கொஞ்சம் அலசிவிட்டு படத்துக்குச் செல்லுங்கள். சடசடவென இரண்டு காலகட்டங்களுக்கிடையே கட் ஆகும் காட்சிகளை எளிதில் பின்தொடர இது உதவும். படத்தின் முழு அர்த்தத்தையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்!

அணுகுண்டு பற்றிய படம் என ப்ளாக்பஸ்டர் ஹாலிவுட் படங்களை மனதில் வைத்து படம் பார்க்க வருபவர்களுக்குப் படம் ஏமாற்றமளிக்கலாம். அணுகுண்டு உருவாக்கம் தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யமானதாக இருந்தாலும் அதற்குப் பிறகு நீளும் டிராமா நிச்சயம் பொறுமையைச் சோதிக்க வாய்ப்புகள் உண்டு. மூன்று மணி நேரப் படம் என்பதால் இந்த அயர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
இதைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால், ஒரு பட்டனை அழுத்தினால் உலகமே அழிய சிறு வாய்ப்பிருந்தும், துணிந்து அந்த பட்டனை அழுத்திய ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக அருகிலிருந்து பார்த்த உணர்வை ஏற்படுத்தும் அற்புத பயோபிக் சினிமா இந்த `ஓப்பன்ஹெய்மர்’.