ஜம்மு காஷ்மீர்: இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் கத்தி உள்பட கூர்மையான ஆயுதங்களை விற்கவும், வாங்கவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த தடைக்கு பின்னணியில் உள்ள அதிர்ச்சியான காரணம் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர்… 2019 வரை மாநிலமாக இருந்தது. ஜம்மு காஷ்மீரின் தலைநகராக ஸ்ரீநகர் இருந்தது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் உள்ளது.
மேலும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தியா-பாகிஸ்தானை பிரிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதும், தீவிரவாதிகள் மற்றும் இந்திய ராணுவனத்தினர் இடையே துப்பாக்கி சண்டை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களை முற்றிலுமாக ஒழித்து மக்களை அமைதியாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்கிடையே தான் யாரும் எதிர்பாராத வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்யவும், வாங்கவும், பொது இடங்களில் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை ஸ்ரீநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் முகமது அய்ஜாய் ஆசாத் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், ‛‛ஸ்ரீநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக பொது இடங்களில் கூரிய ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் பொது இடங்களில் கூரிய ஆயுதங்களை எடுத்து செல்லவும், விற்கவும், வாங்கவும் தடை விதிக்கப்படுகிறது
அதன்படி வீட்டு வேலை, விவசாயம், அறிவியல், தொழில் சார்ந்த நோக்கங்களை தவிர பிற நோக்கங்களுக்காக 9 இன்ச் நீளம், 2 இன்ச் அகலம் அல்லது அதற்கு மேலான கூரிய ஆயுதங்களை வைத்திருப்பது ஆயுத சட்டம் 1959 ன் கீழ் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இது கூர்முனை ஆயுதங்களை விற்கும் அல்லது வாங்கும் வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கசாப்பு கடைக்காரர், தச்சர்கள், எலக்ட்ரிஷீயன்கள், சமையல்காரர்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது. இதுதவிர மற்றவர்கள் கூரிய ஆயுதங்களை வைத்திருந்தால் அடுத்த 72 மணிநேரத்தில் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ஸ்ரீநகரில் உள்ள கமர்வாரி, பெமினா, க்ரால்போரா, பாட்மாலூ, நவ்ஹட்டா, கோதிபாக் ராம்பாக் உள்ளிட்ட பல இடங்களில் சமீபத்தில் கத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்தன. இதன் காரணமாக தான் தற்போது ஸ்ரீநகர் மாவட்டத்தில் பொது இடத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களின் விற்பனை மற்றும் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.