புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவுக்கு, அமலாக்கத் துறை, ஜூலை 26-க்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம்தேதி கைது செய்தனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அதனால் இந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்றும், அவரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் ஜூலை 14-ம் தேதி தீர்ப்பளித்தார்.
அதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், அமலாக்கத் துறையின் கைது நடைமுறையை எதிர்த்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது மனைவிமேகலாவும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அதிகாரம் இல்லை: இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஆக.26-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். அதுவரை இந்த வழக்கில் வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.