லண்டன்:பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, இதுவரை 50 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதேநேரத்தில், இதற்காக அவர் பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை.
இந்தியாவை பூர்விகமாக உடையவர் தீபக். இவரது மனைவி அவிலாஷா. இவர்கள் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் தணிக்கையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களது மகள், அதிதி, 10. தங்கள் மகளுக்கு பல்வேறு நாடுகள் பற்றிய அனுபவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்த தம்பதி ஒரு திட்டம் வகுத்தனர்.
இதன்படி அதிதிக்கு, 3 வயதாக இருந்தபோதே வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை துவக்கினர். கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும், 50 நாடுகளுக்கு தங்கள் மகளை இவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு அதிதி பயணம் செய்து முடித்து விட்டார்.
இதுதவிர, ஆசிய நாடுகளான சிங்கப்பூர், இந்தோனேஷியா, நேபாளம் ஆகியவற்றுக்கும் இந்த சிறுமி பயணம் செய்து விட்டார்.
ஆனாலும், இந்த சுற்றுப் பயணத்துக்காக பள்ளிக்கு ஒரு நாள் கூட இவர் விடுமுறை எடுத்தது இல்லை என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.
இது குறித்து தீபக் கூறியதாவது:
எங்கள் மகளுக்கு பல்வேறு நாடுகளின் கலாசாரம், உணவு பழக்க வழக்கம், மொழி, தட்ப வெப்பம் ஆகியவை குறித்த அனுபவம் ஏற்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினோம். இதனால், அவளுக்கு 3 வயதாகும்போதே சுற்றுப் பயணத்தை துவக்கி விட்டோம்.
இந்த பயணங்களால் அவளது பள்ளி படிப்பு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டோம்.
வெள்ளிக்கிழமை மாலையில் பயணத்தை துவக்கி, ஞாயிறு நள்ளிரவில் வீடு திரும்பும் வகையில் குறுகிய கால பயணமாகவே திட்டமிட்டோம். எங்களின் வேலைக்கும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த பயணத்துக்காக ஆண்டுக்கு, 21 லட்சம் ரூபாய் செலவிடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்