கைபர் பக்துன்வா: பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் தனது காதலனை சந்திக்க இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் எல்லை தாண்டி சென்றுள்ளதாக தகவல். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி முகமை நிறுவனமான ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியை சேர்ந்த 35 வயது பெண்ணான அஞ்சு, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் வசித்து வரும் 29 வயதான தனது காதலன் நஸ்ருல்லாவை சந்திக்க அங்கு சென்றுள்ளார். அவர் அந்த மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தை சேர்ந்தவர். ஃபேஸ்புக் மூலமாக இருவரும் பேசி பழகியுள்ளனர். அஞ்சுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் முறையான விசாவுடன் அஞ்சு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு 30 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல். டெல்லியில் இருந்து வாகா வழியாக இஸ்லாமாபாத்துக்கு அவர் வந்துள்ளார்.
நஸ்ருல்லா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என அஞ்சு சொல்லி உள்ளதாகவும் அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளார். ஆனால், அஞ்சு பாகிஸ்தான் நாட்டை பார்ப்பதற்கு வந்துள்ளார் என நஸ்ருல்லாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகவும் தகவல். எல்லை தாண்டி வந்த அஞ்சுவை விசாரிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதே போல பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த சீமா ஹைதர் (27 வயது), ஆன்லைனில் பப்ஜி விளையாடிய போது டெல்லி அருகேயுள்ள உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் (22 வயது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகவே சமூக வலைதளம் வாயிலாக காதலித்து வந்தனர். அவ்வப்போது நேபாளத்தில் இருவரும் நேரில் சந்தித்து வந்தனர். இதைத் தொடர்ந்து காதலருடன் இந்தியாவில் நிரந்தரமாக தங்க முடிவு செய்த சீமா ஹைதர், முதல் கணவரை பிரிந்து கடந்த மே மாதம் நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தார். தற்போது இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.