விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.
மாநிலம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை ஒரே நேரத்தில் – ஒரே இடத்தில் சந்திப்பதைவிட, மண்டலம் மண்டலமாகச் சென்று சந்திப்பது பயன் தரும் என்பதால் முதற்கட்டமாக, தீரர்கள் கோட்டமாம் திருச்சி – கருமண்டபம் ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26-ஆம் நாள் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாமில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 15 கழக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தலைமைக் கழகத்திலிருந்து அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் விவரங்களும் நேரடியாக சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் தயாராக உள்ளன.
வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் தேர்தல் நாளன்று வாக்குகளைப் பெறுவதோடு முடிவடைந்து விடுவதில்லை. அரசுக்கும், கழகத்திற்கும், வாக்காளர்களுக்கும் பாலமாகச் செயல்படும் பெரும் பொறுப்பு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடமே உள்ளது.
தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நாளன்று ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் இப்பாசறைக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் முறையாக இயங்கிடும் வண்ணம் தயாராகும் விதமாக சமூக ஊடகங்கள் குறித்தான பயிற்சிகள் இக்கூட்டத்தில் வழங்கப்படவுள்ளன.
திருச்சியில் நடைபெறவுள்ள பயிற்சிப் பாசறையில், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு. நேரு அவர்கள் வரவேற்புரை ஆற்றவுள்ளார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும் என்ற தலைப்பில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கழக வழக்கறிஞர் அணி செயலாளர் திரு. என்.ஆர்.இளங்கோ எம்.பி., அவர்களும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கம் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கழக வெளிநாடு வாழ் இந்தியர் நல அணியின் செயலாளர் திரு. அப்துல்லா எம்.பி., அவர்களும், திராவிட மாடல் கழக அரசின் மக்கள் நலன் காக்கும் சமூக நலத்திட்டங்கள் குறித்து மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ.ராசா எம்.பி., அவர்கள், மாண்புமிகு. அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு.டி.ஆர்.பி. ராஜா அவர்கள் ஆகியோரும், சமூக வலைத்தளங்கள்- பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும் குறித்து கழக மாணவரணித் தலைவர் திரு. ராஜீவ்காந்தி அவர்களும் விரிவாக விளக்கவுள்ளார்கள். திரு. காடுவெட்டி தியாகராஜன் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.
நிறைவாக, நமது கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையுரையும், உங்களில் ஒருவனான நான் சிறப்புரையும் ஆற்றுகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்திலும் வரலாம்; முன்கூட்டியும் வரலாம். எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் நாம் இருக்க வேண்டும்
அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம். டெல்டாவில் அதற்கான முதல் களம் அமைந்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே என்று குறிப்பிட்டுள்ளார்.