மதுரை: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியம் தேவை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கைக்காக நடத்திய பேரணியின்போது நடந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு நினைவிடம் அமைக்க தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் இடம் ஒதுக்கவேண்டும். மாஞ்சோலை எஸ்டேட்டில் 8400 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு விடப்பட்ட குத்தகை இன்னும் ஓரிரு ஆண்டில் முடிவடைய உள்ளது. அதை மீட்டு தொழிலாளர்களுக்கு விவசாயம் செய்ய ஒவ்வொருவருக்கும் 2 1/2 ஏக்கர் வழங்கவேண்டும்.
மணிப்பூரில் நிகழ்ந்த பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவம் யாராலும் ஏற்க முடியாதது. இது மிகப் பெரிய மனித உரிமை மீறல். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, சிறப்பு நீதிமன்ற ஆணையம் அமைக்கவேண்டும். மணிப்பூர் சம்பவம் பற்றி சில நாட்கள் மட்டுமே பேசுவது; பிறகு மறந்து விடுவது எனும் நிலை கூடாது. மரக்காணத்தில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த 22 பேர் குறித்து எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை நடக்கவேண்டும். அப்போதுதான் அந்நிய நிதி உதவியால் நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினைவாத , தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும்.
டெல்டா மாவட்டங்களுக்கு கர்நாடகா தண்ணீர் வழங்குவது பற்றி முதல்வர் எதுவும் பேசவில்லை. மோடிக்கு எதிராக திமுகவினர் பேசுகின்றனர். நாங்கள் மது ஒழிப்பிற்கு ஏற்கெனவே போராடியுள்ளோம். மது உணவும் அல்ல; மருந்தும் அல்ல. அது ஒரு விஷம். காலை, மதியம், மாலை என எப்போது சாப்பிட்டாலும் விஷம் கேடு விளைவிக்கும். மது 220 நோய்களை உருவாக்குகிறது” என தெரிவித்தார்.