இம்பால்: மிசோரம் மாநிலத்தில் வசித்து வரும் மெய்தி இன மக்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு விமானம் மூலமாக அழைத்து வர மணிப்பூர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதற்காக மணிப்பூர் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது என்ற விவரத்தை பார்க்கலாம்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன்சிங் பதவி வகித்து வருகிறார். மலைகளும் வனப்பகுதிகளும் நிறைந்த மணிப்பூரில் பெரும்பான்மையினரான ‘மெய்தி’ இன மக்கள் உள்ளனர். இவர்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும் என கோரி வருகிறார்கள். அதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வன்முறையும் ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாகவே மணிப்பூர் பற்றி எரிகிறது. பெரும் பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மணிப்பூரில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது. அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒட்டுமொத்த தேசத்தையும் இந்த வீடியோ அதிரவைத்தது. கடந்த மே 4-ந் தேதி பதிவு செய்யப்பட்ட வீடியோ அண்மையில் வெளியாகி ஒட்டு மொத்த தேசத்தையும் அதிரவைத்தது. இந்த படு பாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்று முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய … கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் தற்போது மிசோரம் மாநிலத்தில் வசித்து வரும் மெய்தி இன மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏன் எனில், மிசோரம் மாநிலத்தில் முன்னாள் பயங்கரவாத அமைப்பான MNF Returnees Association’s (PAMRA) -இல் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. இந்த அறிக்கையில், மிசோரம் மாநிலத்தில் இருந்து தங்கள் பாதுகாப்பிற்காக மெய்தி இன மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.
மிசோரம் மாநிலத்தில் எத்தனை மெய்தி இன மக்கள் வசிக்கிறார்கள் என கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்துள்ள மிரோ மாணவர் சங்கம், துணிச்சலான நடவடிக்கையை எடுக்கப் போகிறது” என்று கூறியது. மணிப்பூரில் குக்கி இன பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தால் மிசோ இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்று எனக் கூறியிருந்தது. இதனால், மெய்தி இன மக்களுக்கு மிசோரத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் மெய்தி இன மக்களை விமானம் மூலமாக தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக சிறப்பு விமானங்களை ஐஸ்வாலில் இருந்து இம்பாலுக்கும் ஐஸ்வாலில் இருந்து சில்சாருக்கு இயக்க மணிப்பூர் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், மெய்தி இன மக்களை விமானம் மூலம் அழைத்து செல்லும் நடைமுறைகள் எப்போது தொடங்கும் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆயிரக்கணக்கான மெய்தி இன மக்கள் மிசோரம் மாநிலத்தில் வசித்து வருகிறார்கள்.