இம்பால்: மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசே உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என அம்மாநில பாஜக எம்எல்ஏ பவோலியன்லால் ஹொக்கிப் பரபரப்பாக கூறியிருப்பதோடு, முதல்வர் பீரன் சிங்கையும் விமர்சனம் செய்து இருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு வாழும் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த மே மாதம் 3ம் தேதி மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி மக்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது இருபிரிவு மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளனர். 140க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் இரண்டரை மாதம் கடந்தும் வன்முறை நீடித்து வருகிறது. இதற்கிடையே தான் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதேபோல் பல பெண்களுக்கு வன்கொடுமைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரை ஆளும் பாஜக அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்கு சென்று நிலைமையை பார்வையிட்டாலும் அவரால் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
மேலும் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். 2 பெண்களின் நிர்வாண ஊர்வலம் தொடர்பான வீடியோ வந்த பிறகு 77 நாட்கள் கழித்து அவர் மணிப்பூர் வன்முறை பற்றி பேசினார். அப்போது, ‛‛மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் கோபம் நிரம்பி இதயம் வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். இதனை சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது” என தெரிவித்தார்.

இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை குறித்து அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பவோலியன்லால் ஹொக்கிப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள சைகோட்டைச் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். குக்கி பழங்குடியின இனத்தை சேர்ந்த இவர் கடந்த மே மாதமே மணிப்பூர் முதல்வர் பீரன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். இவர் உள்பட 10 எம்எல்ஏக்கள் அந்த கடிதத்தை எழுதினர். அதில் குக்கி மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு தனி நிர்வாகம் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை.
இந்நிலையில் தான் பாஜக எம்எல்ஏ பவோலியன்லால் ஹொக்கிப் வன்முறை பற்றி கூறியிருப்பது பெரும் பரபரப்பை கூட்டியுள்ளது. இதுதொடர்பாக அவர் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், ‛‛மணிப்பூரில் இனக்குழுவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடங்கிய பிறகு அதனை போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையாக சித்தரிக்க முதல்வர் முயன்றார்.
இதன்மூலம் மணிப்பூர் வன்முறைக்கு முதல்வர் மறைமுகமாக ஆதரவாக இருப்பது தெளிவாக தெரியும். மேலும் மணிப்பூரில் வசிக்கும் குக்கி இன மக்களை போதைப்பொருள் கும்பல் என சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. தற்போதைய சூழலில் பழங்குடியினரின் நிலத்தை உரிமை கொண்டாடும் போராக இதனை பார்க்க வேண்டும்.
மணிப்பூர் முதல்வர் பீரன் சிங் மைத்தேயி லீபுன் மற்றும் ஆரம்பாய் தெங்கோல் போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளார். நாங்கள் பிரதமர் மோடியை சந்திக்க முயற்சித்து வருகிறோம். ஏனென்றால் வன்முறையை மத்திய அரசால் தான் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தமட்டில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினர் போதைப்பொருள் பயிரிடுவதாகவும், அதனை காரணம் காட்டி மாநில அரசு குக்கி பழங்குடியினரை மலைப்பகுதிகளில் இருந்து விரட்ட முயற்சி செய்வதாக ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது. மேலும் மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தமட்டில் மைத்தேயி மக்கள் சமவெளி பகுதியில் வசிக்கின்றனர். மைத்தேயி பிரிவு மக்களால் பள்ளத்தாக்கு, மலைப்பகுதிகளில் நிலம் வாங்க முடியாது.
ஏனென்றால் அம்மாநிலத்தில் பழங்குடியினராக இருப்போர் மட்டுமே அங்கு நிலத்தை வாங்க முடியும். இத்தகைய சூழலில் தான் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கூறி வரும் நிலையில் குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் பாஜக எம்எல்ஏ பவோலியன்லால் ஹொக்கிப் முதல்வர் பீரன்சிங் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.