புனோம் பென் : கம்போடியாவில் பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடந்தது. ஆசியாவின் நீண்ட கால ஆட்சியாளர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரதமர் ஹூன் சென், 70, மீண்டும் வெற்றி பெறுவார் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடந்தது. எதிர்க்கட்சிகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அரசியல் சூழ்நிலை உள்ள அங்கு, ஆளும் கம்போடிய மக்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 1998ல் பிரதமராக பதவியேற்ற ஹூன் சென், ஆசிய நாடுகளில் நீண்ட கால பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தத் தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைத்தவுடன், பிரதமர் பதவியை, தன் மூத்த மகன் ஹுன் மனேட்டிடம் ஒப்படைக்க உள்ளதாக சென் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனாலும், அவர் நிழல் பிரதமராக இருப்பார் என்றே கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், முக்கிய எதிர்க்கட்சிகளை சிதறடித்து, அரசியலில் சிம்மசொப்பனமாக ஹூன் சென் விளங்கி வருகிறார்.
கடந்த, 2013 தேர்தலில் சி.என்.ஆர்.பி., எனப்படும் கம்போடிய தேசிய மீட்புக் கட்சி, 44 சதவீத ஓட்டுகளை பெற்றது. அதே நேரத்தில் கம்போடிய மக்கள் கட்சி, 48 சதவீத ஓட்டுகளையே பெற்றது.
இதன்பின், சி.என்.ஆர்.பி., கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து, 2017 தேர்தலின்போது, அந்தக் கட்சிக்கான அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன்பின், அந்தக் கட்சியில் இருந்தவர்கள், கேன்டில்லைட் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினர். சமீபத்தில், அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு கம்போடிய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதனால், எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில், நேற்று தேர்தல் நடந்துள்ளது. சிறிய கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டுள்ளன. அதனால், ஹூன் சென் மீண்டும் வெற்றி பெறுவார் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்