வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தற்போதைய அரசின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இடைக்கால பிரதமராக அந்நாட்டு நிதி அமைச்சர் இஷாக் தர்ரின் பெயர் பரீசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏப்., 10ம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து, அந்நாட்டு பிரதமராக இருந்த தெஹ்ரீக் – இ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் பதவி விலகினார்.
பதவியேற்பு
இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் தற்போதைய அரசின் பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இது குறித்து பேசிய ஷெபாஸ் ஷெரீப், ‘எங்கள் அரசின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடையும். அடுத்த அரசு வருவதற்கு முன் இடைக்கால ஆட்சிக் காலத்தில், அரசைக் காப்பாற்ற பொறுப்பான நபர் நியமிக்கப்படுவார்’ என்றார்.
ஆலோசனை
இந்நிலையில் இடைக்கால பிரதமராக, தற்போதைய நிதி அமைச்சர் இஷாக் தர்ரை நியமிக்க ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணிக் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அல் சர்தாரியின் ஆலோசனையின்படி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான விவாதத்துக்குப் பின் ஓரிரு வாரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement