பாரபங்கி: உத்தர பிரதேசத்தில், காதல் விவகாரத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, ஆத்திரமடைந்த அண்ணன், தங்கையின் தலையை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாரபங்கி மாவட்டத்தில் உள்ள மித்வாரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், ரியாஸ், 22. இவரது தங்கை, ஆஷிபா, 18.
ஆஷிபாவுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சந்த் பாபு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இது, ரியாசுக்கு பிடிக்கவில்லை. பல முறை அவர் கண்டித்தும், சந்த்பாபு உடன் ஆஷிபா தொடர்ந்து பேசி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆஷிபா – சந்த் பாபு ஆகியோர், வீட்டை விட்டு தப்பி ஓடினர்.
இது குறித்த புகாரின்படி வழக்குப் பதிந்து விசாரித்த போலீசார், தப்பி ஓடிய ஆஷிபா, சந்த்பாபுவை கண்டுபிடித்தனர்.
சந்த் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஆஷிபாவை போலீசார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இந்த காதல் விவகாரம் தொடர்பாக, நேற்று மீண்டும், ரியாஸ் – ஆஷிபா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரியாஸ், கூர்மையான ஆயுதத்தால், ஆஷிபாவின் தலையை வெட்டினார்.
பின், துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, ரியாஸ் சரண் அடைந்தார்.
அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்