பீகாரில், இளம்பெண் ஒருவர் இரவில் தன்னுடைய காதலனைச் சந்திப்பதற்காகத் தினமும் தன் ஊரில் மின்சாரத்தை துண்டித்துவந்த சம்பவமானது, ஊர்மக்கள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்ததையடுத்து தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேலும், இந்தச் சம்பவத்தில் ஊர்மக்கள் செய்த மற்றொரு செயல், அந்தக் காதல் ஜோடிக்கே திடீர் சர்ப்ரைஸை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகாரின், மேற்கு சம்பாரனிலுள்ள ஒரு கிராமத்தில் ப்ரீத்தி குமாரி என்பவர், பக்கத்துக் கிராமத்து இளைஞரான ராஜ்குமாரைக் காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் ப்ரீத்தி குமாரி, இரவில் தன்னுடைய காதலனைச் சந்திப்பதற்காகத் தினமும் தன் கிராமத்தில் மின்சாரத்தைத் துண்டித்துவந்திருக்கிறார். இதன் காரணமாக, ஊர்மக்களும் என்ன காரணமென்றே தெரியாமல் தினமும் இரவில் அவஸ்தைப்பட்டனர்.
ப்ரீத்தி குமாரியின் இந்தச் செயலால், கிராமத்தில் அவ்வப்போது சில திருட்டுச் சம்பவங்களும் அரங்கேறின. இன்னொருபக்கம் கிராம மக்களும், இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது தொடர்பாக மின்வாரியத்தில் புகாரளித்திருக்கின்றனர். அப்போதும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. இறுதியில் உள்ளூர் மக்களே என்ன பிரச்னை என்று கண்டுபிடிக்க ஆயத்தமாகினர். அவ்வாறு ஒருநாள் திடீரென இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது, ப்ரீத்தி குமாரியும், ராஜ்குமாரும் ஒன்றாக இருப்பதைக்கண்டு, ஊர்மக்கள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அதோடு, ராஜ்குமாரை அந்த ஊர்மக்கள் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அப்போது ப்ரீத்தி குமாரி, `யாரும் அடிக்க வேண்டாம்’ என ராஜ்குமாரைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். பின்னர், பதிலுக்கு ராஜ்குமாரும் ஒரு கும்பலுடன் தன்னை அடித்தவர்களைத் தாக்கினார். இதனால், இரு கிராமங்களுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இறுதியில் இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கூடி, இதற்கு ஒரு தீர்வுகாண முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து அந்த முடிவின்படியே, இரு கிராமத்தினரும் சேர்ந்து ப்ரீத்தி குமாரிக்கும், ராஜ்குமாருக்கும் உள்ளூர் கோயிலிலேயே திருமணம் செய்துவைத்தனர்.