மேகாலயா முதல்வர் வீடு மீது திடீர் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள்-போராட்ட குழு தலைவர் பகீர் தகவல்!

துரா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா முகாமிட்டிருந்த துரா நகர முகாம் அலுவலகம் மீது மர்ம நபர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்; முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த தங்களுக்கும் சமூக விரோதிகளின் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என காரோ ஹில்ஸ் சமூக அமைப்பான ACHIK தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேகாலயா மாநிலமான காசி, ஜெயந்தியா மற்றும் காரோ மலைகளை உள்ளடக்கிய பகுதி. காசி மலைப் பகுதி மக்கள் நீண்டகாலமாக தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதப் போராட்டம் நடத்தினர். மேகாலயா, அஸ்ஸாம் பகுதிகளை உள்ளடக்கிய Achik Land என்ற தனிமாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பது Achik National Volunteer Council (ANVC) என்ற ஆயுத குழுவின் இலக்கு. இந்த அமைப்பை தடை செய்த மத்திய அரசு பின்னர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

13 நாட்கள் போராட்டம்: இன்னொரு பக்கம் மேகாலயா அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை காசி மலைப்பகுதி மக்கள் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக துரா நகரத்தை மேகாலயா மாநிலத்தின் குளிர்கால தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக A’chik Conscious Holistically Integrated Krima (ACHIK) என்ற அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர். இப்போராட்டம் அமைதி வழியில் நடைபெற்று வந்தது. ACHIK அமைப்பினர் போராட்டத்தை பாஜக ஆதரித்தது.

துரா பேச்சுவார்த்தை: இதனைத் தொடர்ந்து துராவில் உள்ள முதல்வர் கான்ட்ராட் சங்மா அலுவலகத்தில் ACHIK அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கனவே மேகாலயா மாநில அரசு அறிவித்தது. இதன்படியே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. அப்போது ACHIK அமைப்பினர் வெளியே கூடி இருந்தனர்.

திடீர் தாக்குதல்: இப்பேச்சுவார்த்தை உள்ளே நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஒரு கும்பல், முதல்வர் கான்ட்ராட் சங்மா இல்லம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலால் சுமார் 1 மணிநேரம் முதல்வர் கான்ட்ராட் சங்மா வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார். மேலும் பேச்சுவார்த்தை நடத்திய ACHIK தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் சிதறி ஓடினர். இதனையடுத்து துராவில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 5 போலீசார் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற ரூ50,000 நிதி உதவியை முதல்வர் கான்ராட் சங்மா அறிவித்துள்ளார்.

என்ன நடந்தது? : இந்த திடீர் வன்முறை சம்பவம் தொடர்பாக முதல்வர் கான்ராட் சங்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ACHIK தலைவர் Laben Ch Marak, The Meghalayan என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டி: முதல்வர் இல்லம் தாக்கப்பட்ட வன்முறை மிகுந்த கவலையைத் தருகிறது. இந்த வன்முறை எப்படி திடீரென நிகழ்த்தப்பட்டது என்பதுதான் புரியவில்லை. நாங்கள் அமைதிவழியில்தானே பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறோம். காரோ மலைப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அமைதியாகத்தான் வந்து சென்றனர். முதல்வர் இல்லம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி முழக்கமிட்டது சமூக விரோத கும்பல்தான். இதற்கு முன்னர் நாங்கள் அவர்களை பார்த்ததே இல்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னரும் கூட அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாம் நடத்துவது அமைதி வழிப் போராட்டம் என்றுதான் சொல்லிவிட்டு சென்றோம்.

சமூக விரோதிகள்: வன்முறையில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தேன். அவர்கள் முகம் சிவந்து போயிருந்தது. இதற்கு முன்னர் அவர்களை நான் பார்த்ததும் இல்லை. எங்களுடைய 13 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒருநாளும் அவர்கள் பங்கேற்றதும் இல்லை. அத்தனையும் திடீரென நிகழ்ந்துவிட்டது. என்ன காரணத்துக்காக இந்த தாக்குதல் நடந்தது என்பதும் தெரியவில்லை. அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை பேரும் இங்கேயேதான் இருக்கிறோம். நாங்கள் எங்கேயும் தப்பி செல்லவும் இல்லை. இவ்வாறு Laben Ch Marak கூறினார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.