வெறும் 3 % தான்.. மபியில் காங்கிரஸ் நிச்சயம் அடித்து தூக்கும்.. பாஜகவிற்கு ட்விஸ்ட் தந்த கணிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெல்லும் என்று கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் என்ற நிறுவனம் கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன . தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய சூழலில் பாஜகவுக்கு 130 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு 96 பேர், 3 சுயேச்சைகள், ஒரு பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் உள்ளன.

கடந்த 2018 தேர்தலில் மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டசபை உருவானது. அதாவது யாருக்கும் 116 இடங்களில் வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் 114, பாஜக 109, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாடி 1, சுயேச்சைகள் 4 பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. கமல்நாத் முதல்வரானார். இவரது ஆட்சி ஓராண்டு நடந்தது.

இதற்கிடையே தான் முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜவுக்கு தாவினார். இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததோடு, பாஜக ஆட்சியை பிடித்தது. சிவ்ராஜ் சிங் முதல்வரானார். மேலும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜ்யசபா எம்பியான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய அமைச்சரானார். இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மத்திய பிரதேச மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற போகிறது.

இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை துவங்கி இருக்கின்றன. இமாச்சல பிரதேசம் ,கர்நாடகாவில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், அடுத்தாக மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் சத்தீஸ்கரில் வெல்ல ஆயத்தமாகி வருகிறது

மத்திய பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கர்நாடகா பாணியை கையில் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெல்லும் என்று கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் என்ற நிறுவனம் கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது.

GZR குழு மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 5 முதல் ஜூலை 5 வரை 80 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. சுமார் 40,000 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. அனைத்து சாதியினரிடமும், அரசியல் கட்சியினரிடமும் பிரச்சனைகள் குறித்து பேசி கணிப்பை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி 127 முதல் 132 இடங்களை பெறும் என்றும் வாக்கு சதவீதம் 42.67 சதவீதம் +2 ஆக இருக்கும் என்று கூறியுள்ளது. பாஜக 98 முதல் 103 இடங்களில் வெல்லும் என்றும் வாக்குசதவீதம் 39.51 சதவீதம் +2 ஆக இருக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 5 முதல் 7 இடங்களை பெறுவார்கள் என்றும் வாக்குசதவீதம் 17.82 சதவீதம் +2 ஆக இருக்கலாம் என்று GZR குழு கணித்துள்ளது.

இதில் பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக 30.11 சதவீதம் பேரும்,காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக 28.67 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜோதிராதித்யா சிந்தியா முதல்வராக 10.72 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம் காங்கிரஸ் கட்சியில் யாரை முதல்வராக நிறுத்தினாலும் 10.12 சதவீதம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.பாஜகவில் இதே போன்று என்றால் 8.34 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் திக்விஜயன் சிங்கை வெறும் 7.35 சதவீதம் பேர் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.