கெய்ரோ,-சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர், 100வது நாளை எட்டிய நிலையில், பயணியர் விமானம் விபத்துக்கு உள்ளானதில், நான்கு ராணுவ வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
வட கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த ஏப்ரல் மாதம் முதல், அந்நாட்டின் ராணுவப் படையினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த கலவரத்தில், 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இரு தரப்புக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போர், நேற்று முன்தினம், 100வது நாளை எட்டியது.
இந்நிலையில், கிழக்கு சூடானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் பயணியர் விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது.
இதில், நான்கு ராணுவ வீரர்கள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை உயிர் பிழைத்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது. 100 நாட்களை கடந்தும் போர் நடந்து வருவது, அந்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement