ஜெய்ப்பூர் :சமூக வலைதளத்தில் நட்பாக பழகி காதலித்த பாகிஸ்தான் நாட்டவர், திடீரென உறவை துண்டித்ததால், அவரைக் காண ராஜஸ்தானைச் சேர்ந்த திருமணமான பெண், அந்நாட்டிற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு, 34. திருமணமான இவருக்கு 15 மற்றும் 9 வயதில் குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு, சில மாதங்களுக்கு முன், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா, 29, என்பவர் சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமானார். நட்பாக பழகி வந்த இருவரும் நாளடைவில் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஞ்சு வுடனான நட்பைநஸ்ருல்லா திடீரென துண்டித்தார்.இதையடுத்து, அவரைக் காண அஞ்சு கடந்த வாரம் பாக்., புறப்பட்டு சென்றார்.
அங்கு கைபர்பக்துன்க்வா மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லாவை சந்தித்த நிலையில், அவர் வருகை குறித்து அறிந்த அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி
உள்ளனர்.அஞ்சு உரிய ஆவணங்களுடன் சட்டப்பூர்வமாக சென்றதால், அவரையும், நஸ்ருல்லாவையும் போலீசார் விடுவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, நஸ்ருல்லாவுடன் வாழ விரும்புகிறேன் என அஞ்சு தெரிவித்ததால், அவருக்கு அந்நாட்டில் ஒரு மாதத்துக்கு தங்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, ராஜஸ்தானின் பிவாடியில் உள்ள அஞ்சுவின் கணவர் அரவிந்த் கூறுகையில், ”தோழியை சந்திக்க ஜெய்ப்பூர் செல்வதாக கூறிய என் மனைவி, தற்போது பாக்.,கின் லாகூரில் இருப்பது தெரியவந்துள்ளது.
”நான் வாட்ஸாப் வாயிலாக அஞ்சுவிடம் பேசினேன். விரைவில் அவர் திரும்பி வருவார் என நம்புகிறேன்,” என்றார்.
‘பப்ஜி’ எனப்படும் ஆன்லைன் விளையாட்டில் அறிமுகமான காதலரை சந்திக்க, பாக்., நாட்டு பெண் சீமா, தன் நான்கு குழந்தைகளுடன் சமீபத்தில் இந்தியா வந்து தங்கியுள்ள நிலையில், இதே போன்று சம்பவம் நம் நாட்டில் நடந்து
உள்ளது.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இந்தியா — பாக்., இடையிலான உறவு சுமுகமாக இல்லாத நிலையில், இந்த எல்லைத் தாண்டிய காதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement