சென்னை: T.Rajendar (டி.ராஜேந்தர்) வீராசாமி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒழுங்காக நடிக்காத ஹீரோவை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து சென்று டி.ராஜேந்தர் வெளுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் 1980ஆம் ஆண்டு ஒருதலைராகம் என்ற கதையை எழுதினார். படத்தை தயாரித்து இப்ராஹிம் இயக்கினார். அந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு ஒருதலை ராகம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. காதல் கதைதான் என்றாலும் அதில் இருந்த எமோஷனும், எழுதப்பட்ட வசனங்களும் வேறு ஒரு ஃபீலை கொடுத்தது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
ராஜேந்தரின் ஆட்சி: ஒருதலை ராகம் படம் கொடுத்த பெரும் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய வசந்த அழைப்புகள் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அடுத்ததாக அவர் இயக்கிய ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா, தங்கைக்கு ஓர் கீதம், உறவை காத்த கிளி, மைதில் என்னை காதலி, என் தங்கை கல்யாணி உள்ளிட்ட படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின.
இசையமைப்பாளர் டி.ராஜேந்தர்: ஒருபக்கம் திரைப்படங்கள் இயக்குவதிலும், நடிப்பதிலும் பிஸியாக இருந்த ராஜேந்தர் மறுபக்கம் தன்னுடைய படங்களுக்கு தானே இசையமைக்கவும் செய்தார். அவர் இசையமைத்த பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. இதன் காரணமாக ஒரு முழுமையான கலைஞன் தமிழ் திரைத்துறைக்கு கிடைத்துவிட்டதாக பலரும் அவரை கொண்டாடி தீர்த்தனர்.
வீராசாமி: ஒருகட்டத்தில் சினிமாவின் ட்ரெண்ட் மாறிக்கொண்டே இருக்க டி.ராஜேந்தர் விடாப்பிடியாக படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அப்படி அவர் இயக்கி நடித்த படம்தான் வீராசாமி. கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான் அப்படத்தில் சந்தானம், மும்தாஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் படுதோல்வியடைந்தது. இந்தச் சூழலில் வீராசாமி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

ஷூட்டிங் ஸ்பாட் அலப்பறை: அதாவது படத்தின் ஒரு காட்சியை நீச்சல் குளத்தின் ஒரு முனையில் இருந்தபடி எடுத்துக்கொண்டிருந்தார் டி.ராஜேந்தர். மறுமுனையில் ஹீரோ ஹீரோயினிடம் ரொமான்ஸ் செய்ய வேண்டும். ஹீரோ, ஹீரோயின் மும்பையை சேர்ந்தவர்கள். காட்சியை விவரித்துவிட்டு டேக்குக்கு சென்ற பிறகு ஹீரோ பயங்கரமாக சொதப்பியிருக்கிறார். பலமுறை ராஜேந்தர் சொல்லி பார்த்திருக்கிறார்.
நீச்சல் அடித்து வெளுத்த டி.ஆர்: பொறுமை இழந்த டி.ராஜேந்தர் உடனடியாக நீச்சல் குளத்துக்குள் குதித்து நீந்தியபடியே, டேய் ஒழுங்கா செய்ய மாட்டியா இரு வரேன் என சென்று நீச்சல் குளத்தின் மறுமுனையில் ஏறி,ம் அந்த ஹீரோவை ஒன்றிரண்டு முறை அறைந்துவிட்டாராம். அதுமட்டுமின்றி பெண்களை தொட்டு எப்போதும் தொட்டு நடிக்காத அவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சந்தானத்தை அருகில் அழைத்து ஹீரோயினிடம் எப்படி ரொமான்ஸ் செய்ய வேண்டும் என நடித்து காண்பித்தாராம்.
அப்படி செய்துவிட்டு மீண்டும் நீச்சல் குளத்தில் குதித்து நீந்தியபடியே வந்து துண்டை எடுத்து தனது உடம்பை துடைக்காமல்கூட ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் சொன்னாராம். இந்தத் தகவலை நடிகர் சந்தானம் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். மேலும் இதுபோன்ற காட்சியை நான் எந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலும் பார்த்ததில்ல்லை எனவும் அவர் தெரிவித்தார்.