டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. என்றாலும், இந்த மசோதாவை எப்போது தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு, துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என மத்திய அரசு அவரச சட்டம் பிறப்பித்தது. இச்சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இதற்கான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இச்சட்டம் எளிதாக நிறைவேறும் என்றாலும், மாநிலங்களவையில் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. எனவே, ஒடிஷாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற சூழல் உள்ளது. இதில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்து வரும் பவன் கல்யாண் உடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவு பெறுவதில் சிக்கல் எழலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அவசர சட்டத்தின் பின்னணி: டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்து வந்தது.

இந்த வழக்கில், “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது” என தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு சில நாட்களிலேயே, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ)உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார். தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (1991) திருத்தும் வகையிலும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கும் வகையிலும் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த டெல்லி அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

அவசர சட்டத்தின்படி, என்சிசிஎஸ்ஏ-வுக்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார் என்றும் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் அவருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.