நெல்லை மாவட்டம், அப்புவிளை கிராமத்தைச் சேர்ந்தவர், முத்தையா. 19 வயது நிரம்பிய அவர், சங்கனான்குளம் கிராமத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் இட்டமொழி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவரும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், முத்தையா ஆணவக்கொலை செய்யப்பட்டதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.

முத்தையாவும், லட்சுமியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பணி செய்யும் இடத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், அந்த விவகாரம் பெண்ணின் வீட்டினருக்குத் தெரியவந்ததும் கண்டித்திருக்கின்றனர். ஆனாலும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்ததால், லட்சுமியின் அக்காள் கணவர் சில வாரங்களுக்கு முன்பு முத்தையாவை அழைத்துக் கண்டித்ததுடன் தாக்கியிருக்கிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கம்பெனியின் விடுமுறை நாளில் லட்சுமி தன்னுடைய காதலன் முத்தையாவைத் தேடி அவரது சொந்த கிராமமான அப்புவிளைவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு முத்தையாவின் பெற்றோரைச் சந்தித்த அவர், தான் அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பின்னர் அங்கேயே மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, தனது வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

இந்த நிலையில், இரவில் முத்தையா செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதனால் அவர் வெளியே சென்றிருக்கிறார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை. அதனால் அதிர்ச்சியடைந்த முத்தையாவின் பெற்றோர், அவரை ஊர் முழுவதும் தேடியிருக்கின்றனர். இந்த நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அவர் மர்மமான முறையில் கத்திக் குத்துக் காயங்களுடன் இறந்துகிடந்திருக்கிறார்.
இந்த விவகாரத்தால் முத்தையாவின் உறவினர்கள் கொந்தளிப்படைந்தனர். தன் மகன் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக முத்தையாவின் பெற்றோரும் குற்றம்சாட்டினர். அதனால் அவருடைய உடலை வாங்க மறுத்துப் போராடி வருகிறார்கள். இந்த நிலையில், முத்தையாவை அவருடைய நண்பர்களே கொலைசெய்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது. தன்னுடைய நண்பரின் தங்கையை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நண்பர்களே முத்தையாவைக் கொலைசெய்துவிட்டதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

திசையன்விளை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், சுரேஷ் என்பவரின் தங்கையை முத்தையா கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட மோதலில், கொலை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக காரம்பாடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், மதியழகன், பிரகாஷ் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர். கொலையாளிகள் மூவரின் கைது மூலம், முத்தையா கொலையானது ஆணவக்கொலை அல்ல என காவல்துறை விளக்கமளித்திருக்கிறது.