167 பள்ளிகளை தத்தெடுத்த லட்சுமி மஞ்சு

தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் ஏராளமான படங்களை தயாரித்தும் உள்ளார். தமிழில் கடல், காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். லட்சுமி மஞ்சு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'அக்னி நட்சத்திரம்' மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் லட்சுமி மஞ்சுவுடன், அவரது தந்தையும், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகருமான மோகன் பாபு நடித்திருப்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிப்பு மற்றும் தயாரிப்புடன் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் லட்சுமி மஞ்சு 'டீச் பார் சேஞ்ச்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் மாவட்டத்தில் 15 பள்ளிகள், ரங்காரெட்டி மாவட்டத்தில் 25 பள்ளிகள், யாதாத்ரியில் 81 பள்ளிகள், ஸ்ரீகாகுளத்தில் 16 பள்ளிகள் மற்றும் கட்வாலில் 30 பள்ளிகள் என மொத்தம் 167 பள்ளிகள் தத்தெடுத்துள்ளார்.

லட்சுமி மஞ்சு கூறியதாவது: கல்வி ஆண்டு முழுவதும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். அவர்களின் விலைமதிப்பற்ற ஆதரவும், கூட்டாண்மையும் எங்கள் முயற்சிகளின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

ஐதராபாத், ரங்காரெட்டி, யாதாத்ரி, ஸ்ரீகாகுளம் மற்றும் கட்வால் ஆகிய மாவட்டங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் ஸ்மார்ட் வகுப்பறை முயற்சிகளை செயல்படுத்தி அதிக மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

தெலுங்கானா அரசாங்கத்துடனான டீச் பார் சேஞ்ச் ஒத்துழைப்பு என்பது தத்தெடுப்புத் திட்டம் மட்டும் அல்ல, அரசுப் பள்ளி ஆசியர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.

அரசு பள்ளிகளில், குறிப்பாக தற்போது வருகை குறைவாக உள்ள கிராமப்புறங்களில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் புதிய கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அரசாங்கம் ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.