பெஷாவர், ‘ஆன்லைன்’ வாயிலாக ஏற்பட்ட காதலால், கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு பாகிஸ்தான் சென்ற பெண், அங்கு முஸ்லிம் மதத்துக்கு மாறி, காதலரை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அஞ்சு, 34. இவர் திருமணமாகி, கணவர் அரவிந்த் என்பவருடன் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி என்ற இடத்தில் வசித்து வந்தார்.
இவர்களுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
அஞ்சுவுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா, 29, என்ற இளைஞருடன், சமூக வலைதளம் வாயிலாக நட்பு ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி வந்த அவர்கள் காதலிக்க துவங்கினர்.
இதை தொடர்ந்து, தோழியை சந்திக்க ஜெய்ப்பூர் செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு கடந்த 20ம் தேதி புறப்பட்ட அஞ்சு, வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றார். அங்கு அப்பர் திர் மாவட்டத்தில் உள்ள காதலன் நஸ்ருல்லா வீட்டுக்கு சென்றார்.
அஞ்சுவிடம் முறையான ஆவணங்கள் இருந்ததால், அவர் 30 நாட்கள் பாகிஸ்தானில் தங்கி இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. அவர் ஆக., 20ல் மீண்டும் இந்தியா சென்றுவிடுவார் என்றும் காதலர் நஸ்ருல்லா தெரிவித்தார்.
இந்நிலையில், அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறி, தன் பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார். இருவரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி முன் நேற்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இஸ்லாமிய முறைப்படி நிக்காவும் நடந்தது.
இது குறித்து அஞ்சு என்கிற பாத்திமா வெளியிட்டுள்ள ‘வீடியோ’வில் கூறியிருப்பதாவது:
நான் என் விருப்பப்படி, சட்டப்பூர்வமாக பாகிஸ்தான் புறப்பட்டு வந்தேன். இங்கு பாதுகாப்பாக இருக்கிறேன். எனவே, என் உறவினர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊடகங்கள் தொல்லை கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement