Jailer 3rd Single – அதெல்லாம் ஜுஜுபி மேட்டர்.. ஜெயிலர் மூன்றாவது சிங்கிள் அப்டேட்

சென்னை: Jailer 3rd Single (ஜெயிலர் மூன்றாவது சிங்கிள்) ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிளான ஜுஜுபி குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.

தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் உருவாகியிருக்கிறது. மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என பான் இந்தியா ஸ்டார்கள் களமிறங்கியிருக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் வெற்றியை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்ற திட்டத்தில்தான் இத்தனை ஸ்டார்களை களமிறக்க ரஜினி ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ்: படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ரஜினிக்கு மட்டுமின்றி பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரசிகர்களின் கேலிக்கு ஆளான நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் பெரும் சம்பவம் செய்து தன்னை மீண்டும் நிரூபிக்க வெறியோடு காத்திருக்கிறார். அவரை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என அவருடன் பழகியவர்கள் தொடர்ந்து பேட்டிகளில் கூறிவருகின்றனர்.

முத்துவேல் பாண்டியன்: படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிறையிலிருந்து தப்பித்து செல்லும் ஒரு கேங்கை தடுத்து நிறுத்துவதும், ஒரே இரவில் நடப்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படம் ஆக்‌ஷனோடு நெல்சன் ஸ்டைலில் டார்க் காமெடியாகவும் உருவாகியிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இதனால் படம் நிச்சயம் மெகா ஹிட்டடிக்கும் என ரஜினி ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இரண்டு சிங்கிள்கள்: ஜெயிலர் படத்திலிருந்து இரண்டு சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. காவாலா பாடலில் தமன்னா தனது நடனத்தின் மூலம் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட இரண்டாவது பாடலான ஹுக்குமில் ரஜினிகாந்த்தை புகழும்படியும், அவர் மட்டும்தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்பதை உணர்த்தும்படியும் பாடல் வரிகள் அமைந்திருந்தன. இதன் காரணமாக விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதலும் எழுந்தது.

Jailer Movie 3rd Single Jujubi Releasing Tomorrow At 6 PM

ஆடியோ வெளியீட்டு விழா: இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரசிகர்களுக்கு இலவசமாக 1000 பாஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பாஸ்களை வெறும் 15 நொடிகளில் பதிவு செய்து ரசிகர்கள் அலப்பறை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது சிங்கிள்: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜுஜுபி பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டாவது சிங்கிள் போல் மூன்றாவது சிங்கிளிலும் அலப்பறையை கெளப்புறோம் என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.