சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -தமன்னா குத்தாட்டம் போட்ட காவாலா பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்தப் பாடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரீல்ஸ் வீடியோ செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்தப் பாடல் யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் பல வியூஸ்களை தொடர்ந்து பெற்று வருகிறது.
காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்ட பாக்கியா மற்றும் இனியா: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் அடுத்தமாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ், சென்சார் உள்ளிட்டவை நிறைவடைந்து படத்தின் ரன் டைமும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜெயிலராக ரஜினி நடித்துள்ளார். ஒரே நாளில் நடைபெறும் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படம் உருவாகியுள்ளது.
படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் காவாலா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. லிரிக் வீடியோவாக வெளியான இந்தப் பாடலில் ரஜினி மற்றும் தமன்னா இருவரும் இணைந்து குத்தாட்டம் போட்டிருந்தனர்.

குறிப்பாக இந்தப் பாடலில் தமன்னாவின் ஆட்டம் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலை பிரபலங்களும் ரசிகர்களும் ரீல்ஸ் வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சுசித்ரா மற்றும் அவரது மகள் இனியாவாக நடித்துவரும் நேகா இருவரும் இந்தப் பாடலின் ரீல்ஸ் வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் குத்தாட்ட பாடலாக வெளியான நிலையில், அவர்களது ஆட்டம் வேறு மாதிரியாக அமைந்துள்ளது.
அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் வெறுமனே முகம் மற்றும் கைகளைக் கொண்டு அவர்கள் இருவரும் இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். இதை ஆட்டம் என்று சொல்லலாமா தெரியவில்லை. இதனிடையே, நாங்க இப்படித்தான் ஆடுவோம் என்று நேகா தன்னுடைய கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இதுகூட நல்லாத்தான் இருக்கு என்று ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளனர். க்யூட் என்றும் சிலர் கமெண்டடித்துள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளது. நெல்சனின் முந்தைய படம் பீஸ்ட் சொதப்பலான ரிசல்ட்டை கொடுத்த நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களை அவர் கொடுத்துள்ளார். இந்நிலையில் வரும் 28ம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.