Mari Selvaraj – மாரி செல்வராஜ் மீது அவ்வளவு கோபம்.. மனம் திறந்த நடிகை

சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) மாமன்னன் ரிலீஸுக்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் மீது கடுமையான கோபத்தில் இருந்ததாக நடிகை ரவீனா தெரிவித்திருக்கிறார்.

மாரி செல்வராஜ் தனது கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்னைக்கு வந்தவர். பிறகு ராமின் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து தன்னிடம் இருக்கும் திறமையால் அவரிடமே உதவி இயக்குநராக சேர்ந்தார். ராம் இயக்கிய கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் மாரி செல்வராஜ்: மறக்கவே நினைக்கிறேன், தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் அவர் கவிதைகளும் எழுதியிருக்கிறார். கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாகி மாரி செல்வராஜ் மீது அனைவரது கவனத்தை திருப்பியது.

கர்ணன்: அதற்கு அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். தாணு தயாரித்த அந்தப் படம் மெகா ஹிட்டாகாவிட்டாலும் சூப்பர் ஹிட்டானது. அதேசமயம் வரலாற்றை திரித்து கர்ணனில் காண்பித்துவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது படமாக மாமன்னனை இயக்கினார். வடிவேலு, ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மெகா ஹிட்: இதுவரை தமிழ் சினிமா தொடாத கதைக்களத்தை தொட்டு தனது வித்தையையும் இறக்கி மாமன்னன் படத்தை மெகா ஹிட் படமாக மாற்றிவிட்டார் மாரி செல்வராஜ். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரவீனா பேட்டி: இந்நிலையில் மாமன்னன் படத்தில் ஃபகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்த ரவீனா சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “மாமன்னன் படத்துக்காக மொத்தம் 17 நாட்கள் ஷூட்டிங் சென்றேன். நான் வசனம் பேசும் காட்சிகளிலும் நடித்தேன். ஆனால் அதை மொத்தமாக இயக்குநர் வெட்டி தூக்கிவிட்டார். அதனால்தான் என்னுடைய கேரக்டருக்கு வசனம் எதுவுமே படத்தில் இல்லை.

அதுகூட பரவாயில்லை என்னுடைய கேரக்டருக்கு பெயர்கூட இல்லை. படம் வெளியான பிறகு அதை பார்த்த எனக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மீது கடுமையான கோபமும், வருத்தமும் ஏற்பட்டது. ஆனால் எனது கதாபாத்திரம் நன்றாக ரீச்சாகிவிட்டதால் அந்த கோபம் வருத்தமெல்லாம் போய்விட்டது” என்றார்.

ரவீனா ரவி: ரவீனா ரவி அடிப்படையில் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆவார். அப்படிப்பட்ட அவரையே படத்தில் ஒரு வசனம்கூட பேசவிடாமல் மாரி செல்வராஜ் செய்துவிட்டாரே என படம் வந்த புதிதில் நெட்டிசன்கள் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது. ரவீனா ரவி லவ் டுடே படத்தில் ப்ரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.