Motivation: `அபாயகரமான கடல் பாதை!'- 24 ஆண்டுகள் கப்பல்களுக்கு வழிகாட்டிய டால்பின் – கதையல்ல நிஜம்

`என் வாழ்க்கைக்கு வழிகாட்டி என் நம்பிக்கைதான்.’ – முன்னாள் அமெரிக்க செனட்டர் கே ஹேகன் (Kay Hagan). `வாழ்க்கையின் சிறந்த வழிகாட்டி நம் வலிமைதான்.’ – சுவாமி விவேகானந்தர்.

`எனக்கென்ன?’ மனோபாவம் இப்போது பரவலாகியிருக்கிறது. அதாவது யாருக்கு, எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் போகிற சுயநலம் அதிகரித்திருக்கிறது. ரயில் விபத்து, வன்முறைச் சம்பவங்கள் போன்ற செய்திகள்கூட உலுக்கிப்போடாமல், வெற்று வரிகளாகக் கடந்துபோகிற அளவுக்கு மனிதர்களின் மனம் மரத்துப்போய்விட்டது. அப்படியிருக்க, பிறரைப் பற்றி யோசிக்க அவகாசம் ஏது?

அடுக்குமாடிக் குடியிருப்புகளில், பக்கத்து அப்பார்ட்மென்ட்டில் என்ன நடக்கிறது… பலருக்கும் தெரிவதில்லை; அங்கிருக்கும் மனிதர்களின் முகங்கள்… சாரி, நினைவில் இல்லை. பெயர்… ம்ஹூம்… தெரியாது. பட்டப்பகலில், தெருவில் ஒரு பெண்ணை இழுத்துப்போட்டு அடிப்பவனைத் தடுக்க யாரும் முன்வருவதில்லை. சாலையைக் கடக்கத் தடுமாறும் முதியவருக்கு உதவ நேரமில்லை. இவ்வளவு ஏன்… உறவினர்களோடும் நண்பர்களோடும் தொலைபேசியில் பேசுவதற்கு நேரம் இருப்பதில்லை. சதா ஓட்டம்… எதை நோக்கி, எதன் பொருட்டு என்று தெரியாத ஓட்டம். இப்படி… அடுத்தவர்மீதான அக்கறை நாளுக்கு நாள் குறைந்துவருவது, மனிதநேயம் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்துபோவதற்கான அடையாளம்.

மனிதன், சக மனிதனுக்கு உதவுவதற்கே யோசிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்தச் சூழலில் ஆபத்துகள் நிறைந்த, உயிரையே பலி கேட்கிற கடல்வழிப் பாதையொன்றில் ஒரு டால்பின் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது; உயிரைக் காப்பாற்றியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா… `அது உண்மை’ என்கிறது வரலாறு.

Ship ( Representational Image)

`என் வாழ்க்கைக்கு வழிகாட்டி என் நம்பிக்கைதான்.’ – முன்னாள் அமெரிக்க செனட்டர் கே ஹேகன் (Kay Hagan).

`நம்பவே முடியலையேப்பா… இப்பிடியெல்லாம் நடக்குமா என்ன?’ அந்தக் காலகட்டத்தில், நியூசிலாந்தின் குக் ஜலசந்தி (Cook Strait) வழித்தடத்தில் கப்பலில் பயணம் செய்யும் பலருக்கும் எழுந்த கேள்வி அது. ஏன் இந்தக் கேள்வி என்பதற்கு வருவதற்கு முன்பு குக் ஜலசந்தியைப் பற்றி ஒரு சிறு குறிப்பை பார்த்துவிடுவோம்.

நியூசிலாந்தின் வடிவம் தனித்துவமானது. இரண்டு தனித்தீவுகள்… அவற்றுக்கு இடையே இருக்கும் கடல் பகுதிதான் குக் ஜலசந்தி. உலகின் மிக ஆபத்தான கடல் பகுதிகளில் ஒன்று. இந்தப் பகுதியில் கப்பலில் பயணம் செய்வதற்கு, அசாதாரணமான துணிச்சல் வேண்டும். உயிரைப் பற்றிய கவலை இல்லாத மனிதராக இருக்க வேண்டும். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்தப் பகுதியில் படகிலோ, கப்பலிலோ பயணம் செய்வது சவாலான காரியம். வழியெங்கும் கடலில் மூழ்கிக்கிடக்கும் கண்ணுக்குத் தெரியாத பாறைகள்; கப்பலையே கவிழ்த்துவிடும் வேகத்துக்கு திடீரென எழும் பெரிய அலைகள்; திடீரென முளைக்கும் பனிப்பாறைகள். பாறையில் மோதி கப்பல் கவிழ்ந்துவிடலாம். தரைதட்டி நடுக்கடலில் நின்றுபோகலாம். ஏன்… பெரும் பாறைகளில் மோதினால் சுக்குநூறாகக் கப்பலே உடைந்துபோகலாம். இந்தக் காரணங்களால் பல மாலுமிகளுக்கு இந்தக் கடல் பகுதியில் பயணம் செய்ய வேண்டுமென்றாலே கிலி பிடித்துக்கொள்ளும்.

`பெலோரஸ் ஜேக்’ (Pelorus Jack)

இப்போது ஆரம்பத்தில் எழுந்த கேள்விக்கான காரணத்துக்கு வருவோம். 1988-ம் ஆண்டு. குக் ஜலசந்தியில் பிரிண்டில் (Brindle) என்ற பாய்மரக் கப்பல் மிதந்து வந்துகொண்டிருந்தது. கப்பலின் மேல்தளத்தில் கேப்டன், அவருடைய மனைவி, அவர்களுடன் வேறு சிலரும் நின்றுகொண்டிருந்தார்கள். கேப்டன் எதையோ கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். கப்பலுக்கு முன்னால் ஒரு டால்பின் கடலிலிருந்து எழுந்து குதிப்பதும், பிறகு நீரில் மூழ்குவதும், மறுபடியும் குதித்து ஆட்டம்போடுவதுமாகப் போய்க்கொண்டிருந்தது. முதலில் அது மனப்பிரமை என்றுதான் நினைத்தார் கேப்டன். பிறகு தன் மனைவியின் பக்கம் திரும்பினார்… “கப்பலுக்கு முன்னால ஒண்ணு குதிக்குதே… அதை என்னான்னு பாரு…’’

அவர் மனைவியும் கூர்ந்து பார்த்தார். “ஆமா… டால்பின். அது ஏன் நம்ம கப்பலுக்கு முன்னால போகுது?’’

இந்த நேரத்தில் கேப்டனுக்கு லேசாக உற்சாகம் தொற்றிக்கொண்டது. தன் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்தார். டால்பினைச் சுடுவதற்குக் குறிபார்த்தார். அவர் மனைவி சட்டென்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டார். “அதையா கொல்லப்போறீங்க… கொஞ்சம் பொறுங்க’’ என்றார். டால்பின் குதித்து குதித்து முன்னால் போவதையே பார்த்தபடி இருந்தார். “நான் சொல்றபடி செய்யுங்க. அந்த டால்பின் வழிகாட்டிக்கிட்டு போற பாதையிலேயே நம்ம கப்பலை விடச் சொல்லுங்க’’ என்றார்.

`பெலோரஸ் ஜேக்’ (Pelorus Jack)

`இது என்ன முட்டாள்தனம்…’ என்று நினைத்துக்கொண்டாலும், சொல்வது மனைவியாயிற்றே… டால்பின் செல்லும் வழியிலேயே கப்பலைச் செலுத்தினார் கேப்டன். அன்றைக்கு அந்த அற்புதம் நிகழ்ந்தது. டால்பின் சென்ற பாதையில் எந்தச் சிக்கலுமில்லாமல் பிரிண்டில் கப்பல் போய்ச் சேர்ந்தது. அன்று மட்டுமல்ல… அதற்குப் பிறகும் அந்த டால்பினின் வழிகாட்டுதல் தொடர்ந்தது. அது போகும் பாதையில் கப்பல்கள் போனால் எந்தப் பாறையிலும் மோதிக்கொள்ளாமல், பெரும் அலைகளில் அகப்பட்டுக்கொள்ளாமல் எளிதாகப் போக முடிந்தது. அந்த டால்பின், பிரெஞ்ச் பாஸ் (French Pass) என்கிற எல்லை வரை கப்பல்களுக்கு வழிகாட்டும். பிறகு திரும்பி வரும் கப்பல்களுக்கு வழிகாட்டும். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவர்கள்தான், “நம்பவே முடியலையேப்பா… இப்பிடியெல்லாம் நடக்குமா என்ன?’ என்றார்கள்.

`சில நேரங்களில் வாழ்க்கை உங்களை ஒரு பாதையில் வழிநடத்தும். அப்போது உங்களால், உங்களையே அடையாளம் காண முடியும்.’ – அமெரிக்க ஃபேஷன் மாடல் டெனிஸ் பைடாட் (Denise Bidot)

அதை, ரிஸ்ஸோ’ஸ் டால்பின் (Risso’s dolphin) வகையைச் சேர்ந்தது என்றார்கள். சரி, அது ஆணா, பெண்ணா… இந்த வகை டால்பின்களில் ஆண்தான் நான்கு மீட்டர் அளவுக்கு வளரும். இதுவும் நான்கு மீட்டர் அளவுக்கு வளர்ந்திருந்தது. ஆக, அது ஆணாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள். வெறுமனே டால்பின் என்றால் போதுமா… பெயர் எதையாவது வைத்தால்தானே குறிப்பாக அடையாளம் சொல்ல முடியும்… குக் ஜலசந்தியில் பயணம் செய்த மாலுமிகள் ஒன்று சேர்ந்து அதற்கு `பெலோரஸ் ஜேக்’ (Pelorus Jack) என்று பெயர் வைத்தார்கள். `பெலோரஸ் ஜேக்’ என்பது ஸ்காட்லாந்தில் ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடனம். அழகான, அமர்க்களமான நடனம். பெலோரஸ் ஜேக் ஆடுவதும் நடனம்தானே!

Risso’s dolphin (Representational image)

ஜேக், இப்படிக் கப்பல்களுக்கு வழிகாட்டி அழைத்துப்போனது ஒன்றிரண்டு வாரங்களோ, மாதங்களோ இல்லை. 24 வருடங்கள். அது ஓர் ஆச்சர்யமான நிகழ்வு. இந்தப் பயணத்தில் அந்த அழகு டால்பினுக்கு ஆபத்து வராமலும் இல்லை. அது 1904-ம் ஆண்டு. எஸ்எஸ்பென்குயின் (SS Penguin) என்கிற கப்பலுக்கு வழக்கம்போல துள்ளிக்குதித்து வழிகாட்டி, போய்க்கொண்டிருந்தது ஜேக். கப்பலில் இருந்த ஒரு மனிதனுக்கு என்ன தோன்றியதோ… தன் இடுப்புத் துப்பாக்கியை எடுத்தான். சட்டென்று ஜேக்கைச் சுட்டுவிட்டான். ஜேக்கின் பக்கம் இயற்கையும் அதிர்ஷ்டமும் கைகோத்திருந்தன. ஜேக்கின் உடலில் துப்பாக்கிக்குண்டு படவில்லை. தப்பித்துவிட்டது. அதற்குள் அருகிலிருந்த மனிதர்கள், அவனை இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஜேக்குக்கும் ஏதோ தோன்றியிருக்க வேண்டும். திரும்ப ஒருமுறை எஸ் எஸ் பென்குயின் கப்பல் வந்தபோது, ஜேக் அதைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எளிய மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஒன்றையேகொண்ட அந்த டால்பினின் உதவியில்லாமல் அந்தக் கப்பல் கடலில் சென்றது. ஒரு பாறையில் மோதி, கப்பலிலிருந்த 75 பேர் இறந்துபோனார்கள்.

ஜேக் சுடப்பட்டதை அறிந்து நியூசிலாந்து அரசாங்கம் கவலைகொண்டது. நியூசிலாந்து கவர்னர் லார்டு பிளங்கெட் ((Lord Plunket) ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். `குக் ஜலசந்தியிலும், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் கடல்வாழ் உயிரினங்களைக் கொல்வது சட்டத்துக்குப் புறம்பானது. அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு 100 பவுண்டு வரை அபராதம் விதிக்கப்படும்’ என அறிவித்தார். கடல்வாழ் உயிரினத்தின் பாதுகாப்புக்காக முதன்முதலில், உலக அளவில் இயற்றப்பட்ட சட்டம் அதுதான். அதுமட்டுமல்ல… இப்படி ஒரு டால்பின் இருக்கிறது என்று கேள்விப்பட்டு உலகின் பல மூலைகளிலிருந்து ஜேக்கைப் பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பித்தார்கள். அவர்களில் அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின், ஆங்கில எழுத்தாளர் ஃபிராங்க் டி. புல்லென் இருவரும் அடக்கம்.

`பெலோரஸ் ஜேக்’ (Pelorus Jack)

வரலாறு, 1912-ம் ஆண்டு முதல் பெலோரஸ் ஜாக்கைக் காணவில்லை என்று பதிவு செய்துவைத்திருக்கிறது. அதாவது, அது இறந்துபோயிருக்கலாம் எனக் கருதப்பட்டது. திமிங்கிலங்களை வேட்டையாடும் நார்வே நாட்டு கப்பல் ஒன்று ஜேக்கை வேட்டையாடிவிட்டது என்கிறார்கள். குக் ஜலசந்தியில் கடலோரத்திலிருக்கும் விளக்குகளைப் பராமரித்துவந்த ஒருவர், ஒரு டால்பின் கரையொதுங்கியதாகவும், அது ஜேக்காக இருக்கலாம் என்றும் கூறினார். எது எப்படியோ, நியூசிலாந்தில் ஜேக்கைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றப்பட்டன. அஞ்சலட்டைகளில் பெலாரஸ் ஜேக்கின் உருவம் பொறிக்கப்பட்டது. மிகப்பெரிய வெண்கலச்சிலை ஒன்றும் ஜேக்கின் நினைவாக நிறுவப்பட்டது. நியூசிலாந்தின் உள்நாட்டு கப்பல் போக்குவரத்தில் ஜேக்கின் பெயர் பயன்படுத்தப்பட்டது.

பெலோரஸ் ஜேக்கின் வாழ்க்கைப் பயணம் நமக்குச் சுட்டிக்காட்டுவதெல்லாம் ஒன்றுதான்… `சக உயிர்களை நேசிங்க பாஸ்… அவங்களுக்கு உதவுங்க!’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.