சென்னை:
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையின் கண்ணில் மண்ணை தூவி வருவதாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரை ஒரு சீக்ரெட் டீம் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாதகமே அசோக் குமாரின் கையில் இருப்பதால் அவரை எந்த சட்டச்சிக்கலும் இல்லாமல் தூக்குவதற்கு ரகசிய டீம் ப்ளான் செய்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. இதையடுத்து நெஞ்சு வலி, மருத்துவமனை படலங்களுக்கு பிறகு ஒருவழியாக அமாலக்கத்துறை அவரை புழல் சிறையில் அடைத்துள்ளது.
பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் சிறிது காலம் புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவரை தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
சிக்கும் பெரும் புள்ளிகள்:
அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் நாளினை அமலாக்கத்துறை மட்டுமல்ல டெல்லி பாஜகவும் எதிர்பார்த்து காத்துள்ளது. செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த ரெய்டுகளின் போது பல முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறையின் கையில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தினால் திமுகவில் உள்ள பெரிய பெரிய தலைகள் மாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுத்தால் அவரை டெல்லி திகார் சிறைக்கு கொண்டு செல்லும் ப்ளானும் அமலாக்கத்துறையிடம் உள்ளது.
துரத்தும் அமலாக்கத்துறை:
இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க இன்னும் ஒரு மாதக்காலமாவது ஆகும் என்பதால் தலைமறைவாக இருக்கும் அவரது தம்பி அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை வலைவீசி வந்தது. செந்தில் பாலாஜியின் அனைத்து டீலிங்கையும் முன்னின்று செய்து கொடுத்தவர் அசோக் குமார்தான் என்பதால் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால் அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கொடுத்த “அசைன்மெண்ட்” கிட்டத்தட்ட முடிந்துவிடும். எனவே அவரை பிடிக்க அமலாக்கத்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
சுத்துப்போட்ட சீக்ரெட் டீம்:
ஆனாலும் அமலாக்கத்துறைக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தார் அசோக் குமார். 4 முறை சம்மன் அனுப்பியும் கூட அவர் ஆஜராவில்லை. இந்நிலையில்தான் அமலாக்கத்துறை வட்டாரத்தில் இருந்து லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது. அதாவது, அமலாக்கத்துறையில் செயல்படும் சீக்ரெட் டீம் ஒன்று அசோக் குமார் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டதாம். ஜூலை 25-ம் தேதி (நாளை மறுதினம்) அவர் ஆஜராக கடைசி கெடுவை அமலாக்கத்துறை நிர்ணயித்துள்ளது.
தூக்க ரெடியாகும் அதிகாரிகள்:
அன்றைக்கு அசோக் குமார் ஆஜராகாவிட்டால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அதிரடியாக கைது செய்ய அமலாக்கத்துறையின் சீக்ரெட் டீம் ஸ்கெட்ச் போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கைது செய்யப்படுவதை தவிர்க்க அசோக் குமார் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு பார்த்துக்கொள்ளவும் அமலாக்கத்துறை தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.