சென்னை: ஆவினில் விற்கப்படும் பனீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) வாயிலாக, தினமும் 33 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர, வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட 225 வகையான பால் பொருட்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பனீர், பாதாம் பவுடர் விலையை ஆவின் உயர்த்தி உள்ளது. அதன்படி, ஒரு கிலோ பனீர் விலை ரூ.450-ல் இருந்து ரூ.550 ஆகவும், அரை கிலோ ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, பாதாம் மிக்ஸ் 200 கிராம் விலை ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 மட்டும் உயர்த்தப்பட்டது. அதேநேரம், பால் பொருட்கள் விற்பனை விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வை
திரும்ப பெற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.