பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசு திடீர் தடை விதித்திருப்பதால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் அரிசியின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்திருக்கிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்படுவதற்குள், இருக்கின்ற அரிசிகளை வாங்கிவிட வேண்டும் என விலையையும் பொருட்படுத்தாமல் சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள் வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளியினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அரிசி ஏற்றுமதிக்குத் தடை:
உலகிலேயே அரிசி உற்பத்தியில் இந்தியாவும் முன்னணி வகித்து வருகிறது. குறிப்பாக, உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் 40% இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதில், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி 25% பங்கு வகிக்கிறது. இந்த அரிசி வகைகளை அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்ரிக்க நாடுகள் என சுமார் 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், `பாஸ்மதி அரிசி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாகவும், இந்த அறிவிப்பு இந்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் தேவைக்கான பட்டியலில் உள்ள நாடுகளுக்குப் பொருந்தாது’ என்றும் தெரிவித்தது.
என்ன காரணம்:
இந்த தடைக்கான காரணங்கள் குறித்து விளக்கியிருக்கும் மத்திய அரசு, `இந்திய சந்தையில் பாஸ்மதி அல்லாத இதர அரிசி வகைகள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், உள்நாட்டு சந்தையில் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது.

மேலும், சமீப காலமாக இந்தியாவில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 % அதிகரித்திருக்கிறது. அதுவே கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3% அளவுக்கு அரிசி விலை உயர்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. அதேபோல, பண்டிகை காலங்களில் உள்நாட்டுக்கான அரிசி தேவையும் பன்மடங்கு அதிகரிக்கும் சூழல் நிலவுவதால் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என இந்திய அரசு கருதுகிறது.

எனவேதான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக பாஸ்மதி அல்லாத பிற அரிசியின் ஏற்றுமதிக்கு 20% ஏற்றுமதி வரி விதித்தது. ஆனாலும் மத்திய அரசின் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. மாறாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் அரிசி ஏற்றுமதி மேலும் அதிகரித்தது. இதோடு, உக்ரைன்- ரஷ்யா போரால் உலகளாவில் உணவுப்பொருள் ஏற்றுமதி இறக்குமதியில் இருந்தவந்த சமநிலையான தொடர் சங்கிலி பாதிப்பு, உள்நாட்டுக்குள் குறைந்து வரும் நெற்பயிர் சாகுபடி பரப்பு மற்றும் காலம் தவறி பெய்யும் பருவமழையால் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு உள்ளிட்டவைகளும் சேர்ந்துகொண்டதால் எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி மட்டுமல்லாமல் உள்நாட்டுத் தேவைக்குமே அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று கருதிய இந்திய அரசு உடனடியாக பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
அரிசி தட்டுப்பாடு – அலைமோதும் கூட்டம்:
கடந்த ஜூலை 20-ம் தேதி இந்தியாவில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை என்ற அறிவிப்பு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு பீதியைக் கிளப்பியது. அதைத்தொடர்ந்து, விரைவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நினைத்த மக்கள் அந்தந்த நாடுகளில் அரிசி விற்பனை செய்யப்படும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளை நோக்கி படையெடுத்தனர். குறிப்பாக அமெரிக்காவில், ஜூலை 21-ம் தேதியே அதாவது அறிவிப்பு வெளியான மறுநாளே ஈக்களைப் போல சூப்பர் மார்க்கெட்டுகளை மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்த டிமாண்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கடை உரிமையாளர்கள் இயல்பாக இருந்த வந்த அரிசியின் விலையை இருமடங்கு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தியிருக்கின்றனர்.
India bans export of non-basmati white rice on 20th July 2023.
This has triggered the inflation fears over the global food prices.
Indians in the US started to increase their stack with rice bags.#riceexportban#RiceExportsBan #Rice pic.twitter.com/WagU8mI8Gn
— Modification (@__modification) July 22, 2023

குறிப்பாக, 20 டாலருக்கு விற்கப்பட்டுவந்த 10 கிலோ அரிசி தற்போது 30 டாலராக விலை உயர்த்தி விற்கப்படுவதாக அமெரிக்க வாழ் இந்திய மக்கள் வேதனை தெரிவித்துவருகின்றனர். இருப்பினும் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் அரிசியை வாங்கி குவித்து வருகின்றனர். சாரை சாரையாக கூட்டம் அலைமோதுவதால் அனைவருக்கும் அரிசி கிடைக்க வழிசெய்யும் வகையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அரிசி சிப்பம்(சிறு மூட்டை) என்ற புதிய விதிமுறைகளையும் பல்வேறு அரிசி கடை உரிமையாளர்கள் பின்பற்றுவதாகத் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் கனடா, ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகளிலும் இந்தநிலைதான் நீடித்து வருகிறது.!